×

ரூ.810 கோடி முறைகேடு புகாரில் வேலுமணி வீட்டில் ரெய்டு உள்ளாட்சித்துறையில் லஞ்சத்தில் திளைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? திக்..திக் மனநிலையில் கறைபடிந்த அதிகாரிகள்

சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், முறைகேடு நடந்த துறைகளின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்தான் வேலுமணி. கொரோனா காலம் மற்றும் ஸ்மாட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், உள்ளாட்சித்துறையில் வேலுமணியின் உறவினர்கள், நண்பர்களுக்குச் சொந்தமான 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்தான் பிளீச்சிங் பவுடர் முதல் வாகனங்கள் வாங்குவது வரை டெண்டர் எடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அவர் பதவி வகித்த உள்ளாட்சித்துறையின் செயலாளராக இருந்தவர் ஹன்ஸ்ராஜ் வர்மா. இவருக்கு கீழ்தான் ஊராட்சிகளின் நிர்வாகம் வந்தது. அதேநேரத்தில், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக இருந்தவர் ஹர்மந்தர் சிங். இவருக்கு கீழ்தான் சென்னை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்பட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் இருந்தது. ஹர்மந்தர் சிங்கிற்கு கீழ் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்தவர் பாஸ்கரன். இந்த மாநகராட்சி துறையில் ரூ.810 கோடி முறைகேடு நடந்ததாக திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் மீதுதான் விசாரணை நடத்தி சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நகராட்சியில் முறைகேடுகளை செய்ததாகத்தான் தற்போது வேலுமணிக்கு வேண்டிய நிறுவனங்கள், கான்ட்ராக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் நகராட்சி நிர்வாக அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. ஊழல் நடந்ததாக கூறப்படும் துறையின் செயலாளர் ஹர்மந்தர் சிங். ஆணையராக இருந்தவர் பாஸ்கரன். மேலும், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்தவர் பிரகாஷ். கோவை மாநகராட்சி ஆணையராக இருந்தவர் விஜயகார்த்திகேயன், குமரவேல்பாண்டியன் ஆகியோர்தான். இந்த முறைகேட்டில் உயர் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

ஆனால் உயர் அதிகாரிகள்தான் டெண்டருக்கு அனுமதி கொடுப்பவர்கள். இறுதி செய்து, ஆர்டர் வழங்குபவர்கள். இதில் தவறு செய்த அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யும் என்ற பரபரப்பு தற்போது எழுந்துள்ளது.அதேநேரத்தில் சென்னை மாநகராட்சி தலைமை செயற்பொறியாளர் நந்தக்குமார், முன்னாள் தலைமை செயற்பொறியாளர் புகழேந்தி, கோவை மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி, உதவி கமிஷனர் ரவி ஆகியோரது வீடுகளில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதில், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்ட பிறகு அவருக்கு வேறு பதவி இன்னும் வழங்கப்படவில்லை.

தற்போது ரூ.810 கோடி மோசடியில் உயர் அதிகாரிகள் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதனால், அவர்களும் இந்த முறைகேடு வழக்கில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் லஞ்ச முறைகேட்டில் ஈடுபட்ட சில அதிகாரிகள் கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும், கடந்த ஆட்சியின் போது உள்ளாட்சித் துறையில் குறிப்பாக ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உதவி இயக்குனர் (தணிக்கை) உள்ளிட்ட பதவிகள் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

பணம் கொடுத்து பதவிக்கு வந்த உதவி இயக்குனர்கள் பலரும் அவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களிலேயே ஊராட்சிகளில் ஆய்வு என்ற பெயர்களில் வசூலித்து சரி கட்டி விடுவர். ஒரு ஊராட்சிக்கு ஆய்வு செய்ய செல்லும் போது உதவி இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் தணிக்கை ஆகியோருக்கு தலா ரூ.20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அதற்காக கையெழுத்து எதுவும் இடுவது இல்லை. இதுதவிர பிளீச்சிங் பவுடர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நிதிகளை ஒதுக்கீடு செய்வது, ஒப்பந்தம் பெறும் ஒப்பந்தக்காரர்களிடம் கமிஷன் என பல வகைகளிலும் ஊராட்சி உதவி இயக்குனர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களை கசக்கி பிழிந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

ஊரக வளர்ச்சித் துறையில் விடப்படும் இ டெண்டர் முறையிலும் ஏற்பட்ட குழப்பங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது‌. முன்னாள் அமைச்சருக்கு வேண்டிய நபர்கள் மட்டுமே டெண்டரில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்துள்ளது. பினாமி பெயரில் கூடுதல் தொகை மற்றும் குறைந்த தொகை ஆகிய இரண்டையும் பினாமிகளே நிர்ணயம் செய்து ஏலம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை யார் யார் இ டெண்டர் மூலம் ஏலத்தில் பங்கு பெற்றுள்ளனர் என்ற விபரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. பல இடங்களில் முன்னாள் அமைச்சருடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி உதவி இயக்குனர், உதவி இயக்குனர் தணிக்கை உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டரையே மீறி செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற மாவட்டங்களிலும், சட்டசபை தேர்தலின் போதும் அதிமுகவினருக்கு பணத்தை பிரித்து வழங்கும் பொறுப்பையும் வேலுமணிக்கு நெருக்கமான சில அதிகாரிகள் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் பறக்கும் படை என்ற பெயரில் அமைக்கப்பட்ட சோதனை குழுக்களிலும் பெருமளவு முன்னாள் அமைச்சருக்கு வேண்டிய நபர்களே ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிளீச்சிங் பவுடர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நிதிகளை ஒதுக்கீடு செய்வது, ஒப்பந்தம் பெறும் ஒப்பந்தக்காரர்களிடம் கமிஷன் என பல வகைகளிலும் ஊராட்சி செயலர்களை கசக்கி பிழிந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

Tags : Home Department ,Velumani , Will action be taken against the officials involved in the Rs 810 crore raid on Velumani's house and bribery in the Home Department? Dick..dick mentally tainted officers
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...