×

ஒன்றிய அரசின் கடல் சார் மீன்வள மசோதாவை கண்டித்து சென்னை, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் 20 ஆயிரம் மீனவர்கள் ஸ்டிரைக்

சென்னை: மத்திய அரசின் கடல்சார் மீன்வள மசோதாவை கண்டித்து சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் திரண்டு போராட்டமும் நடத்தினர். மழைகால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ள 21 மசோதாக்களில் ஒன்றான கடல் மீன்வள (ஒழுங்காற்று) மசோதா (2021) மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதாவின் படி, மீனவர்கள் 12 கடல் மைலுக்கு உள்ளே மீன்பிடிக்க வேண்டும்; எந்த மீன்களை பிடிக்கச் செல்கிறோம் என்பதை கரையில் அதிகாரிகளிடம் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட மீன் வகை தவிர வேறு வகை மீன்களை மீனவர்கள் பிடித்திருந்தால் அவைகளை கடலிலேயே விட்டு விட வேண்டும். மீனவர்கள் சட்டத்திருத்த வரைவுகளை மீறி செயல்பட்டால் முதல் முறை அபராதமும், 2வது முறை அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையும், மூன்றாம் முறை மீறினால் படகு பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட மீனவர் மீண்டும் தொழில் செய்ய முடியாதபடி கடும் நடவடிக்கைகள் எடுக்க வழி வகுக்கிறது. இது மீனவர்களை முற்றிலும் முடக்கிப் போடும் நடவடிக்கை என்று கூறி தமிழகம் முழுவதும் நேற்று மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நொச்சிக்குப்பம் அருகே பல்வேறு மீனவர் அமைப்புகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக லைட் ஹவுஸ் அருகே வரை வந்தனர். அங்கு போலீசார் அவர்களை மறித்தனர். இதைத் தொடர்ந்து 30 நிமிடத்துக்கு மேல் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் பல்வேறு மீனவர் பகுதிகளில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலோர கிராமங்களில் நேற்று கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பு, குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் இயக்குநர் டன்ஸ்டன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ ஆஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படகுகளில் கருப்பு கொடி:  கன்னியாகுமரியில்  மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்  நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அதில் மீனவர்கள் கருப்பு கொடி கட்டி  வைத்திருந்தனர். இதுபோல் ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கன்னியாகுமரி,  கோவளம் உள்ளிட்ட கிராமங்களில் 2  ஆயிரத்திற்கும் மேற்பட்ட வள்ளங்களும், நாட்டுப்படகுகளும் நேற்று  மீன்பிடிக்க செல்லவில்லை. கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த  வள்ளங்களிலும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது. வீடுகளிலும் கருப்பு  கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். கோவளம் புனித இன்னாசியார்  ஆலயம் முன்பு மீனவர்கள் திரண்டு ஒன்றிய அரசை கண்டித்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். பள்ளம்  கடற்கரையில் மீனவ கிராம மக்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரையுள்ள கடற்கரை கிராமங்களில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு மீனவர்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் மீனவர் சங்க பிரதிநிதிகள் 50 பேர் மட்டும் சென்று கலெக்டர் செந்தில்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல் நெல்லை மாவட்டம் கூட்டப்புளி, தோமையார்புரம், பஞ்சல், உவரி, கூந்தன்குழி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களும் நேற்று கடலுக்கு செல்லாததோடு படகுகளில் கருப்பு கொடியேற்றினர். மீன்பிடி மசோதாவை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள், படகுகளில் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கீழக்கரை, வாலிநோக்கம் கடற்கரையில் வாலிநோக்கம், கீழமுந்தல், மேலமுந்தல் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் மீனவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

Tags : Chennai ,Paddy ,Kumari ,Kumarai ,Union Government , Fishermen, Strike
× RELATED வத்திராயிருப்பில் நெல் கொள்முதல்...