×

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் நிலங்களை மேம்படுத்த கலந்தாய்வு கூட்டம்: அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் பங்கேற்பு

குன்றத்தூர்: மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சுமார் 8 ஏக்கர் நிலத்தை மேம்படுத்துவது தொடர்பாக, நேற்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் காமாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே மாங்காடு பகுதியில் காமாட்சி அம்மன் மற்றும் வைகுண்ட பெருமாள் வகையறா கோயில்களுக்கு சொந்தமான சர்வே எண்: 505/1, 505/3, 514 கொண்ட 7 ஏக்கர் 98 சென்ட் நிலம், மாங்காடு - குன்றத்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இங்கு நெல் சாகுபடி செய்து வந்தனர். கடந்த 6 ஆண்டுகளாக மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து திறந்துவிடும் கழிவுநீர், இந்த நிலத்தில் குளம் போல் தேங்கியுள்ளது.

இதுபோல் கோயில் திறந்து விடப்படும் கழிவுநீரை தடுத்து நிறுத்தும்படி கோயில் நிர்வாகம் சார்பில் பலமுறை பேரூராட்சிக்கு கடிதம் அனுப்பினர். மேலும், காஞ்சிபுரம் கலெக்டர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சிகளின் இயக்குநர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதற்கிடையில், கலெக்டர் தலைமையில் கடந்த 2017ம் ஆண்டு, கழிவுநீர் தேங்குவதை தடுப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில், மாநில நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் கட்டி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்த பின், அதனை பூந்தமல்லி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பிரதான சாலை பெருங்கால்வாயில் இணைக்க மதிப்பீடுகள் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் கடந்த 2017, ஜூலையில், மீண்டும் கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அப்போது, மேற்கண்ட பணியினை 2017-2018ல் போதிய நிதி வசதி இல்லாததால் 2018-2019-ம் நிதியாண்டில் செய்து முடிப்பதாக நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் தெரிவித்தார். அதற்குள் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் தொடுத்த வழக்கின்படி, மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் நிலத்தில் 8 வாரத்தில் கழிவுநீரை சுத்தம் செய்யும்படி பேரூராட்சிகளின் நிர்வாக இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அப்பணிகள் நடக்கவில்லை.

இந்நிலையில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களிடம் கூறியதாவது. மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சுமார் 8 ஏக்கர் நிலத்தை சுத்தப்படுத்தி, மக்களின் பயன்பாட்டுக்காக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொகுதி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

இதற்கான திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்யும்படி தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். கடந்த 2017ம் ஆண்டு பக்தர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இந்த இடத்தை சுத்தம் செய்து, மீண்டும் கழிவுநீர் கலக்காதவாறு ஒரு வரைவு திட்டம் தயார் செய்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தநேரத்தில் போதிய நிதி இல்லை என கடந்த 3 ஆண்டுகளாக இத்திட்டம் நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்தை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.

ஓரிரு மாதத்தில் புதிய வரைவு திட்டம் இயற்றப்பட்டு, அதற்கான டெண்டர் விட்டு, பணிகள் முடுக்கி விடப்பட உள்ளது. இதை விரைந்து செயல்படுத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு எம்எல்ஏவும், இந்து அறநிலையத்துறையும், மாவட்ட வருவாய் துறையும் இணைந்து, திட்டத்தை விரைவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, போதிய நிதி ஆதாரத்தை பெற்று, இத்திட்டத்தால் இப்பகுதி மக்கள் சிறந்த முறையில் பயன்பெற நல்ல சூழ்நிலையை உருவாக்கித் தருவோம் என்றார். ஆய்வின் காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன், துணை ஆணையர் ரேணுகாதேவி, பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணி, டாக்டர் சீனிவாசன் ஆகியோர் இருந்தனர்.

Tags : Mankadu Kamatchi Amman temple ,Sekarbabu ,Anparasan , Consultation meeting to improve the lands of Mankadu Kamatchi Amman temple: Ministers Sekarbabu and Anparasan participate
× RELATED முதலில் டோக்கன் வாங்கியது திமுக...