×

சட்டங்களில் உள்ள குறைகளை நீக்கி ஆன்லைன் சூதாட்டம் நிச்சயம் தடை செய்யப்படும்: அமைச்சர் ரகுபதி உறுதி

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து  சூதாட்டங்களுக்கும் தடை விதிக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் ரத்தம் சேமித்து வைக்கும் இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர், உயர்நீதிமன்றம் காட்டியுள்ள அடிப்படை காரணங்களை கருத்தில் கொண்டு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து அனைவரும் ஏற்கும் வகையில் நிச்சயமாக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும். 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியிடம், முதல்வர் மனு கொடுத்துள்ளார். அதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். இல்லையென்றால் சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து அதன்பிறகு நடவடிக்கை மேற்கொள்வோமே தவிர எவ்வித முரண்பாடுகளுக்கும் தமிழக அரசு இடம் கொடுக்காது.

சட்டக்கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் கடந்த 4ம் தேதி முதல் வாங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க வரும் 26ம் தேதி கடைசியாகும். பின்னர் கவுன்சலிங் தேதியை அறிவிப்போம். தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி ஆன்லைனில் நம்பர் லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Raghupathi , Laws, Online Gambling, Prohibition, Minister Raghupathi
× RELATED புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில்...