ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ எடை பிரிவின் அரையிறுதியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே களமிறங்கிய இந்திய வீரர் பஜ்ரங் புனியா போராடி தோற்றார். முதல் சுற்றில் கிர்கிஸ்தான் வீரர் எர்நாசர் அக்மடாலிவை எதிர்கொண்ட பஜ்ரங், முதல் பகுதியில் 3-1 என முன்னிலை பெற்றார். 2வது பகுதியில் 3-3 என சமநிலை ஏற்பட்டாலும், பஜ்ரங் போட்ட கிடுக்கிப்பிடியில் சிக்கி எர்நாசர் வீழ்ந்தார். அடுத்து பஜ்ரங் காலிறுதியில் ஈரான் வீரர் செகா மோர்டசாவுடன் மோதினார். அதன் முதல் பகுதியில் 1-0 என்ற புள்ளி கணக்கில் செகா முன்னிலை பெற்றார். ஆனால் 2வது பாதியில் பஜ்ரங் 2-1 என முன்னிலைக்கு வந்தார். கூடவே செகாவை உடும்புப்பிடியாய் பிடித்து வீழ்த்திய பஜ்ரங் எழுந்துகொள்ள முடியாமல் செய்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
அரையிறுதியில் அஜர்பைஜான் வீரர் ஹாஜி அலியேவுடன் மோதினார். அடுத்தடுத்து கிடுக்குப்பிடிகள் போட்டு ஹாஜி முதல் பகுதியில் 4-1 என்ற கணக்கில் முந்தினார். மேலும் 2வது பகுதியில் அதே நிலைமை தொடர்ந்தது. அப்போது ஹாஜி விதிகளை மீறி விளையாடுகிறார் என்று பஜ்ரங் முறையீடு செய்தார். ஆய்வின் முடிவில் அது நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்த ஆட்டத்தில் ஹாஜி 12-5 என்ற புள்ளி கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார். இன்று நடைபெற உள்ள வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரர் கடஸிமுராத் ரஷிடோவ் உடன் பஜ்ரங் மோதுகிறார். சீமா ஏமாற்றம்: இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா, 50 கிலோ எடை பிரிவு மகளிர் மல்யுத்தத்தில் நேற்று களமிறங்கினார். அவர் முதல் சுற்றில் துனிசியா வீராங்கனை சாரா ஹமீதியுடன் மோதினார். ஆட்டம் முழுவதும் சாரா ஆதிக்கம் செலுத்த, சீமா 1-3 என்ற புள்ளி கணக்கில் தோற்று வெளியேறினார்.
அதிதி அஷோக் அசத்தல்
மகளிர் கோல்ப் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவின் 3வது சுற்று முடிவில், இந்திய வீராங்கனை அதிதி அஷோக் (23 வயது, பெங்களூரு) 2வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் கோர்டா நெல்லி முதலிடம் வகிக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனை தீக்ஷா தாகர் 51வது இடத்தில் உள்ளார். மொத்தம் 60 வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியின் 4வது மற்றும் கடைசி சுற்று இன்று நடைபெறுகிறது. அதிதி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இன்று பதக்கம் வென்று சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.