சென்னை புழல் உட்பட தமிழகம் முழுவதும் சிறைகளில் திடீர் ரெய்டு: போலீசார் தீவிர சோதனை

சென்னை: சென்னை புழல் சிறை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.  சென்னை அடுத்த புழலில் விசாரணை சிறை, தண்டனை சிறை ஆகியவை உள்ளன. இந்த சிறைச்சாலைகளில், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் மற்றும் வழிப்பறி போன்ற குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்ட கைதிகள் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளுக்கு, தடை செய்யப்பட்ட கஞ்சா, ஹெராயின் முதலான போதை பொருட்கள், செல்போன்கள் மற்றும் துப்பாக்கி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள், அவர்களை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரால், சப்ளை செய்யப்படுவதாக மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவதனத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அவரது தலைமையில் புழல், செங்குன்றம், மாதவரம் பால் பண்ணை உதவி ஆணையாளர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 150 போலீசார் என ஏராளமான போலீசார் நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில், விசாரணை மற்றும் தண்டனை கைதி சிறைகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை காலை 8.30 மணி அளவில் முடிவடைந்து, போலீசார் சிறையில் இருந்து வெளியே வந்தனர். இதுகுறித்து, போலீஸ் கூறுகையில், ‘‘சிறை வளாகத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் மற்றும் செல்போன்கள் சிக்கவில்லை என்றனர்.  இதேபோல் திருச்சி, கோவை, சேலம், வேலூர்,  பாளை, கடலூர், மத்திய சிறைகளில் நடத்தப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Related Stories: