×

அதிக லாபம் தரும் செம்மறி ஆட்டு கிடாய்கள் வளர்ப்பது எப்படி?: கால்நடை மருத்துவ அறிவியல் உதவி பேராசிரியர் விளக்கம்

மன்னார்குடி: தற்போது அதிக லாபம் தரும் தொழிலில் ஒன்று ஆடு வளர்ப்பு. அதிலும் முக்கியமாக செம்மறி ஆட்டு கிடாய்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பிரபலமாகி வரும் செம்மறி ஆட்டு கிடாய் வளர்ப்பு பற்றி நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய கால்நடை மருத்துவ அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் மு. சபாபதி கூறியது:செம்மறி ஆட்டு கிடாய்கள் பொதுவாக இஸ்லாமிய பண்டிகைகளை குறி வைத்தே வளர்க்கப்படுகிறது. ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைக்காக கிடாய்கள் அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது. மேலும் ஆண் குழந்தை பிறந்தால் இரண்டு கிடாய்களும் பெண் குழந்தை பிறந்தால் ஒரு கிடாயும் தானமாக தர வேண்டும். இவை அனைத்திற்கும் நன்கு முறுக்கிய கொம்புடைய கிடாக்களே அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது. எனவே இரண்டு வயது முடித்த கிடாக்கள் சிறப்பானவை அல்லது குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவடைந்து இருந்தால் நல்லது.

ஆடு வளர்க்கும் முன் லாபம் தரும் ரகங்களை தேர்ந்தெடுப்பது லாபம் அடைவதற்கான உத்தியாகும். அதனால் வேகமாக, குறுகிய காலத்தில் எடை அதிகரிக்கும் ரகங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். கொம்புள்ள ராமநாதபுரம் வெள்ளை, வெம்பூர் மற்றும் கீழக்கரை ரகங்கள் மிகவும் பிரபலமானவை ஆகும்.தீவனம் : புல் வகைகளை மட்டுமே விரும்பி உண்கின்றன. அதனால் செம்மறி ஆடுகள் சுதந்திரமாக மேய்ச் சலுக்கு விடப்படுகின்றன. இவை வெள்ளாடுகள் போன்று தழைகளை விரும்புவது இல்லை.இதனால் ஓரளவு இயற் கை முறையில் களை கட்டுப்படுத்த முடியும். மேய்ச்சல் நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளில் செம்மறி ஆடு வளர்ப்பது எளிது.மேலும் இவை விளைநிலங்களில் அறுவடை முடிந்த பின் கூலிக்கு கிடை நிறுத்தப்படுகிறது. இதற்கு நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவு கூலியும் தரப்படுகிறது. இதற்கு பலனாக செம்மறி ஆட்டு புழுக்கைகள் மற்றும் சிறுநீர் போன்றவை அந்த நிலத்திற்கு உரமாக பயன்படுகிறது. பகலில் இவை இடக்கூடிய சாணம் வயலில் உரமாகிறது. மாலையில் வளர்ப்பு புல் வகைகளை அறுவடை செய்து உணவாக கொடுக்கலாம். அடர்தீவனம் அவசியம் கொடுக்க வேண்டும். கம்பு, மக்காச்சோளம், கடலை புண்ணாக்கு, உளுந்து பொட்டு தூள் இவற்றுடன் தாது உப்பு கலவை தகுந்த விகிதத்தில் கலந்து அளிப்பதால் மிக திடமாக வளரும்.

குடற்புழு நீக்கம் :3 மாதங்களில் முதல் குடற்புழு நீக்கம் செய்து பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்வது மூலம் எடை விரைவாக அதிகரிக்கும். குடற்புழு நீக்கம் செய்ய அல்பெண்டசோல் பெண்ட சோல் மெண்டல் பிரசில் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மேலும் வேப்ப இலைகளை சோற்றுக்கற்றாழை உடன் கலந்து தினமும் கொடுப்பதன் மூலம் இயற்கையான முறையில் குடற்புழு நீக்கம் செய்வதோடு நல்ல வளர்ச்சி மற்றும் நல்ல இனப்பெருக்க வீதத்தை உறுதி செய்ய இயலும். செம்மறி ஆடுகளை மேய்க்கும்போது கட்டுப்படுத்துவது எளிது. எனவே 60 ஆடுகளை ஒரு ஆள் எளிதில் வைக்க இயலும். செம்மறி ஆடுகளை எளிதில் எங்கு சென்றாலும் திறந்தவெளியில் அல்லது திறந்த வயலில் மீன் வலை கொண்டு எல்லைகள் அமைத்து கிடை போட இயலும்.நோய் தடுப்பு: செம்மறி ஆடுகளுக்கு அந்தந்த பருவங்களில் தாக்கும் நோய்களுக்கு ஏற்ப தடுப்பூசிகள் போடவேண்டும். மிக முக்கியமாக நீலநாக்கு நோய் துள்ளுமாரி நோய் மற்றும் சப்பை நோய் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். மற்றபடி அதிக எடை விரைவாக வரும்.

கொட்டில் பராமரிப்பு: இரவில் தரையில் அரை அடி உயரம் மணல் பரப்பிய கொட்டில்களில் அடைப்பதன் மூலம் நோய்கள் பரவுவது தவிர்க்கலாம். மழை காலங்களில் கொட்டில் ஈரமாகி நோய் தாக்குதலில் இருந்து தடுக்கலாம். தினமும் செம்மறி ஆடுகளின் கழிவுகளை அள்ளி சுத்தம் செய்ய வேண்டும். சுண்ணாம்பு தூள் இரண்டு நாட்கள் ஒருமுறை கொட்டில்களில் தூவ வேண்டும். இதன் மூலமாக நோய்களை தடுக்கலாம்.விற்பனை காலம்: ஆறு முதல் எட்டு மாதம் வரை வளர்க்கப்பட்டு இஸ்லாமியப் பண்டிகைகளில் விற்பனை செய்வதற்கு ஏற்ப வளர்க்கப்படுகின்றன. 25 முதல் 30 கிலோ எடை வந்த உடனே விற்பனை செய்யப்படுகிறது.செம்மறி ஆட்டு எரு பயன்கள்: கிடாய்களின் கழிவுகளின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மண் புழு உரத்தில் அதிக நுண்ணுட்டச்சத்துகள் காணப்படுகிறது. தோட்டக்கலை பயிர்கள் நன்கு வளரும். பழங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.
மற்ற பயிர்களுக்கு இடும்போது அதன் மகசூல் அளிக்கும் காலம் நீட்டிக்கப்படும். மாடி தோட்டங்களுக்கு சத்தான இயற்கை உரமாக பயன்படுகிறது. மேலும் செம்மறி ஆட்டு புழுக்கைகளை காயவைத்து அதனை பொடியாக்கி மாட்டுச் சாணத்தில் பதிலாக பாதி அளவு குளங்களில் மீன்களுக்கு உணவாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கால்நடை மருத்துவ அறிவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் மு.சபாபதி தெரிவித்தார்.

Tags : Veterinary Science Explanation , How to raise high-profit sheep and goats ?: Assistant Professor of Veterinary Science Explanation
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...