காஞ்சிபுரத்தில் பழிக்குப் பழியாக நடந்த மோதல் வெடிகுண்டு வீச்சில் தம்பி தப்பியதால் அண்ணன் சரமாரி வெட்டிக் கொலை: 5 பேரை பிடித்து விசாரணை

காஞ்சிபுரம்: வெடிகுண்டு வீசியதில் தம்பி தப்பியோடியதால் ஆவேசம் அடைந்த கும்பல், அண்ணன் மீது வெடிகுண்டு வீசியதுடன் சரமாரி வெட்டிக்கொலை செய்தனர். காஞ்சிபுரத்தில் நேற்றிரவு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 19 வார்டு பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). இவரின் தம்பி ரகு (38). இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளது. இவர்கள், கடந்த 2013ம் ஆண்டு பிரபல ரவுடிகள் தினேஷ், தியாகுவின் கூட்டாளி பிரபாகரனின் அண்ணனை வெட்டி கொலை செய்தனர். இதனால் பிரபாகரன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரகுவின் அண்ணனும் தேமுதிக பேச்சாளருமான சரவணனை வெட்டிக்கொலை செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அனைவரும் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளிவந்தனர். இந்த நிலையில், இரண்டு வாரத்துக்கு முன் செந்தில்குமாரின் தந்தை நடராஜனின் 13ம் நாள் காரியம் நடைபெற்றது. இதையொட்டி நேற்றிரவு செந்தில்குமார், ரகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி செந்தில்குமாரின் தாய் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென 10க்கும் மேற்பட்டவர்வந்து அவரது வீட்டின் மீது சரமாரி நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். 

பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் அங்கிருந்த அனைவரையும் தாக்கத் தொடங்கினர். ரகுவை குறிவைத்து தாக்கிய போது அவர் சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டார். தாங்கள் வந்த நோக்கம் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்த கும்பல், தாக்குதலை தடுக்க வந்த ரகுவின் அண்ணன் செந்தில்குமாரை சுற்றிவளைத்து சரமாரி வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பியோடியபோது சுமார் 100 மீட்டர் தூரம் விரட்டிச்சென்று தாக்கினர். இருப்பினும் அவர்களிடம் இருந்து தப்பியபோது அங்குள்ள முட்டு சந்தில் சிக்கிக்கொண்ட செந்தில்குமார் மீது வெடிகுண்டுகளை வீசியதுடன் சரமாரி வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இத்துடன் ஆவேசம் தணியாத கும்பல், அங்கு கிடந்த பாறாங்கல்லை மற்றும் கட்டைகளை எடுத்து செந்தில்குமார் தலையில் போட்டுவிட்டு தப்பினர். இந்த கும்பல் தாக்குதலில் காயம் அடைந்த செந்திலின் சகோதரிகள் கோடீஸ்வரி, மணிமேகலை, மனைவி சசிகலா ஆகிய 3 பேர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சுதாகர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் வந்து, கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி, கொலை தொடர்பாக ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பி ரகுவை கொல்ல குறிவைத்து வந்த கும்பல், அண்ணனை கொடூரமாக கொலை செய்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>