×

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு

சென்னை: கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நேற்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் தலைமையில் மாவட்ட மேலாளர்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்   கிடங்கிலும், மதுபான கடைகளிலும் 90 நாட்கள் கடந்த மதுவகைகள் இருக்க கூடாது. மேலும், குறிப்பிட்ட மதுவகைகளுக்கு முன்னுரிமை கொடுத்து விற்பனை செய்ய கூடாது. அனைத்து மதுவகைகளையும் விற்பனை செய்ய வேண்டும். மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக அதிக அளவில் புகார்கள் வருகின்றன. எனவே, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கட்டுபடுத்த  மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், மாவட்ட மேலாளர்கள் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு முன்பாக சென்று திறக்கும் சமயத்தில் கடைகளில் மேற்பார்வையாளர் உட்பட யார் யார் உள்ளனர் என்பதை புகைப்படம் எடுத்து தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

கடைகளுக்கு பணிக்கு வராத மேற்பார்வையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலாண்மை இயக்குநர் அனுமதியின்றி யாருக்கும் இடமாறுதல் உத்தரவு வழங்கக் கூடாது.  மதுபான கடைகளில் வெளி நபர்கள் இருக்கக் கூடாது. மாவட்ட மேலாளர்கள் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பணியாளர்கள் நலன்குறித்து கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட மேலாளர்களால் முடியாத கோரிக்கையை, முதுநிலை மண்டல மேலாளர்கள் தொழிற்சங்கங்களிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு முதுநிலை மண்டல மேலாளர்களால் முடியாத கோரிக்கையை மட்டுமே மேலாண்மை இயக்குநரிடம் தொழிற்சங்க பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். மேலும் எம்.பி.ஏ.படித்து மாவட்ட மேலாளர்களாக பணிபுரிபவர்கள் மீது அதிக அளவில் புகார்கள் வருகின்றன. எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், எச்சரிக்கையுடன் பணியாற்றவேண்டுமெனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Tags : Tasmag , Strict action if liquor is sold at extra cost: Tasmag management orders officials
× RELATED பொது விடுமுறை நாட்களில்...