×

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என ஒன்றிய அரசு பதில் : மிகப்பெரிய பொய் என எதிர்கட்சிகள் காட்டம்!!

டெல்லி : கொரோனா 2வது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என்ற ஒன்றிய அரசின் பதிலுக்கு எதிர்க்கட்சிகள் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழக்கவில்லை என ஒன்றிய அரசு குறிப்பிட்டு இருப்பதை சுட்டிக் காட்டி 4 காரணங்களை அடுக்கி உள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதி 700%அதிகரித்தது, ஆக்சிஜனை மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடு செய்யாதது, நாடாளுமன்ற குழு உள்ளிட்ட பலரின் ஆலோசனைகளை ஒன்றிய அரசு புறந்தள்ளியது, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யாதது உள்ளிட்ட 4 காரணங்களால் உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டதாக பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லையெனில் மருத்துவமனைகள், உயர்நீதிமன்றங்களை நாடியது ஏன் என ஆம் ஆத்மீ கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருமான சத்யேந்திர ஜெயின் கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் சில காலங்கள் சென்றால், கொரோனா என்ற ஒன்றே இந்தியாவில் இருந்தது இல்லை என ஒன்றிய அரசு தெரிவிக்கும் என கிண்டலித்துள்ள அவர், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது மிகப்பெரிய பொய் என சாடியுள்ளார். பொய்யை கூறியதற்காக ஒன்றிய அரசு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இந்த செய்தியை கேட்டால் எவ்வளவு துயரப்படுவார்கள் என கேள்வி எழுப்பியுள்ள அவர், ஒன்றிய அரசின் பதிலால் தான் வாயடைத்து போயுள்ளதாகவும் கூறியுள்ளார்.


Tags : United States government ,India , ஆக்சிஜன்
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!