×

திரையரங்குகள் திறப்பு?... ஊரடங்கு தளர்வு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை: கொரோனா பெருந்தொற்று காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. எனவே, திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அனைத்து துறை உயரதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என்று தெரிகிறது. கொரோனா தொற்று குறையத் தொடங்கியதால், தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு படிப்படியாக நீக்கப்பட்டு  வருகிறது. அதன்படி, காய்கறி, மளிகை கடைகள், மால்கள், அரசு மற்றும் தனியார்  அலுவலகங்கள், ஓட்டல்கள், பொது போக்குவரத்து, வழிபாட்டு தலங்கள்,  உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவை தற்போது காலை முதல் இரவு 9 மணி வரை  திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதற்கு காரணம், தமிழகத்தில்  கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததே.

இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற  19ம் தேதி (திங்கள்) காலை 6 மணியுடன் முடிவடைகிறது. தற்போது தமிழகத்தில்  கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 2,500க்கும் குறைவாக உள்ளது. 30  மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால்,  பொதுமக்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து வருகிற 19ம்  தேதி முதல் தமிழகத்தில், கூடுதல் தளர்வுகளை அறிவிக்க முதல்வர்  மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சுகாதாரத்துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதேபோல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களை திறப்பது குறித்தும் பேசப்படலாம் என தெரிகிறது.இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இன்று மாலை அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.அதேசமயம் கொரோனா மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளதால் தளர்வுகள் அளிப்பதில் கூடுதல் கவனம் தேவை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது.

Tags : Stalin , திரையரங்குகள், பள்ளி, கல்லூரி
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...