×

அனுமதியின்றி கூடி பட்டாசு வெடித்தனர் போலீசாருடன் பாஜவினர் வாக்குவாதம்: கரூரில் பரபரப்பு

கரூர்: அனுமதியன்றி கூடியதால் கரூரில் பாஜக வாகன பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த முருகன் ஒன்றிய அமைச்சரானார். இதன்காரணமாக மாநிலத்தின் துணைத்தலைவரான அண்ணாமலை புதிய மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனை கொண்டாடும் வகையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து பைக்கில் பேரணியாக செல்ல திட்டமிட்டனர். அதன்படி, நேற்று காலை கரூர் மனோகரா கார்னர் அருகே ஏராளமான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். பைக்கில் பேரணியாக செல்ல தயாராக இருந்தனர். அப்போது போலீசார் வாகன பேரணிக்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஒரு பக்கம் ஏற்பட்டு கொண்டிருந்தது. மற்றொரு பக்கம் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. இது குறித்து கேட்டறிந்த கலெக்டர், டிஎஸ்பி சீனிவாசனை அழைத்து கொரோனா விதிமுறைகளை மீறி இந்த இடத்தில் அதிகளவில் எப்படி கூட அனுமதித்தீர்கள். அனுமதியின்றி கூடியது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும்படி கூறி விட்டு சென்றார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி சுந்தரவடிவேல் தலைமையிலான போலீசார், பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட தலைவர் சிவசாமி, பேரணிக்கு எப்படி தடை விதிக்கலாம் என எஸ்பியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அனைவரும் கலைந்து செல்லுங்கள். இல்லாவிட்டால் கைது செய்வோம் என எச்சரித்ததால் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags : BJP ,Karur , Permission, firecrackers, police, argument
× RELATED மக்களை வஞ்சிக்கும் மோடியின் பாஜக அரசை...