×

இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் மகன் உள்பட 2 பேர் குண்டாசில் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த குமாரச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தியின் மகன் காமேஷ் (33). இவர் கடந்த மே 18 ம் தேதி இரவு 8 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது புதிய இருளஞ்சேரி ஆலமரம் அருகே சென்ற போது பின்னால் இருசக்கர வாகனத்தில் தொடர்ந்த வந்த கமலக்கண்ணன், கோபாலகிருஷ்ணன் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் காமேஷை வழிமறித்து அரிவாளால் சரமரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையா வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (30), கோபாலகிருஷ்ணன் (24), வசந்தகுமார் (21), சேதுபதி (24), ராஜேஷ் (20), தன்ராஜ் (23), சசிகுமார் (22), நாகராஜன் (29) ஆகிய எட்டு பேரையும் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய புதிய இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கமலக்கண்ணன் (30), குமாரச்சேரி காலனியைச் சேர்ந்த லோகநாதன் மகன் கோபாலகிருஷ்ணன் என்ற நாட்டாமை (24) ஆகியோர் மீது  பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இதனால், இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழக்கின் தன்மைகளை ஆய்வு செய்து 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

 மப்பேடு போலீசார் அதற்கான உத்தரவு நகலை புழல் சிறைச்சாலை அதிகாரிகளிடம் வழங்கி 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதில் கோபாலகிருஷ்ணனின் தந்தை லோகநாதன் என்பவர் கீழச்சேரி கிராம நிர்வாக அலுவலராகவும், இவரது தாயாரும், அதிமுகவை சேர்ந்தவருமான ஏகவள்ளி லோகநாதன் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக குமாரச்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Gundasil , Youth murder, AIADMK ex-panchayat leader, son arrested in Kundas
× RELATED குண்டாசில் வாலிபர் கைது