திருவள்ளுர்: திருவள்ளுர் அரசு மருத்துவமனையில், ரூ. 90 லட்சம் மதிப்பிலான, ஒரு நிமிடத்தில் 170 லிட்டர் தயாரிக்கும் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் திறந்து வைத்து, பார்வையிட்டனர். அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 8 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு உள்ளது. இம்மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜனை தினமும் கண்காணித்து அரசு அங்கீகரித்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்திலிருந்து பெற்று வருகிறது. இச்சேமிப்பு கிடங்கில் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜனை நிரப்பி நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை தேவைக்கு ஏற்ப அளித்து வருகிறது. இப்போது புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தன்னார்வலர்கள் மூலம் இம்மருத்துவமனையில் நிறுவி உபயோகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வுற்பத்தி மையத்தின் மூலம் நிமிடத்திற்கு 170 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியும். 3 வது அலை வந்தாலும் அதையும் எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, இன்றைய தினம் கொரோனா என்ற சங்கிலி தொடரை அறுத்தெரிந்த பெருமை இந்தியாவிலேயே தமிழ்நாட்டிற்கு தான் சேரும். கொரோனா தொற்றை அறுத்தெரிந்த பெருமை மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் திருவள்ளுர் மாவட்டம் தான் முதன்மை மாவட்டமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடப் பணிகளை அமைச்சர், கலெக்டர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டடப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். இந்நிகழ்ச்சிகளில் எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ் சந்திரன், திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்கள் ஜவஹர்லால், ஜே.பிரபாகரன், மருத்துவ பணிகள் மற்றும் கட்டடம் செயற்பொறியாளர்எஸ்.முத்தமிழரசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
