×

கோயம்பேடு பகுதி பெட்ரோல் பங்க்கில் வைபை கார்டு மூலம் ரூ 50 ஆயிரம் கொள்ளை: கரூர் வாலிபர் கைது

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு அருகே சின்மயா நகரை சேர்ந்தவர் மனோகர் (32). இவர் கடந்த 1ம் தேதி அண்ணாநகர் துணை ஆணையரிடம் அளித்த புகாரில், ‘கடந்த மாதம் 28ம் தேதி சின்மயா நகரில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் எனது வைபை கார்டு மூலம் ரூ1,500 எடுத்தேன்.  பின்னர் இயந்திரத்தில் இருந்து வைபை கார்டை எடுக்க மறந்து சென்றுவிட்டேன். அன்றைய தினமே எனது வைபை கார்டு மூலம் ரூ25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சியானேன். எனது ஏடிஎம் வைபை கார்டை மீட்டு தர வேண்டும்’ என கூறியிருந்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார், மனோகர் பணம் எடுத்த இடத்தை டிராக் செய்தனர்.

அதில், கீழ்ப்பாக்கத்தில் ஒரு பெட்ரோல் பங்க்கில் அந்த வைபை கார்டு ஸ்வைப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் சென்று, பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் விசாரித்தனர். அதில், அந்த பெட்ரோல் பங்க்குக்கு ஒரு வாலிபர் அடிக்கடி வந்து, எனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, மனோகரின் வைபை கார்டு மூலம் பலமுறை ரூ5 ஆயிரம் ஸ்வைப் செய்து பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது. அப்போது அந்த வாலிபரின் நடவடிக்கை சந்தேகமாக இருந்ததால், அவரது புகைப்படத்தை எடுத்து வைத்திருப்பதாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்தனர்.

அந்தப் புகைப்படத்தையும் சிசிடிவி கேமிராவில் பதிவான உருவத்தையும் தனிப்படை போலீசார் சரிபார்த்து, அந்த வாலிபரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை புரசைவாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த வாலிபரை பிடித்து, கோயம்பேடு போலீசில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (39) எனத் தெரிய வந்தது. மேலும் விசாரணையில், அவரிடம் இருந்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், புரசைவாக்கத்தில் தங்கி, சவுகார்பேட்டையில் ஒரு நகைக்கடை மற்றும் நகை பட்டறைகளில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஓய்வு நேரங்களில் ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களிலேயே வாடிக்கையாளர்கள் மறந்துவிட்டு செல்லும் வைபை கார்டுகளை எடுத்து, பெட்ரோல் பங்க்கில் அந்த கார்டில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த வைபை கார்டில் சம்பந்தப்பட்ட ஓடிபி நம்பர் செல்லாமல், பெட்ரோல் பங்க்கில் கார்டை காட்டி பணத்தை எளிதாக கொள்ளையடிக்கலாம் என்பதை அறிந்து வைத்துள்ளார். இதன்மூலம் அவர் ரூ50 ஆயிரத்துக்கு மேல் கொள்ளையடித்ததாக மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 6 ஏடிஎம் வைபை கார்டுகள், ரூ25 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்த சில மணி நேரங்களில், அண்ணா நகர் துணை ஆணையர் தீபா தலைமையில் கொண்ட தனிப்படை போலீசார், வைபை கார்டு கொள்ளையனை பிடித்ததற்கு சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.

Tags : Coimbatore petrol station ,Karur , Rs 50,000 robbery at Coimbatore petrol station with Wi-Fi card: Karur youth arrested
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது