சென்னை: கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடலில் விதிகளை மீறி 240 குதிரை திறன் கொண்ட மோட்டார் படகுகள் பயன்படுத்த தடைக்கோரிய மனு மீது முடிவெடுக்க வேண்டும் என்று மீன்வளத்துறை இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள கடல் பகுதியில் விதிகளை மீறி மீனவர்கள் சிலர் 240 குதிரை திறன் கொண்ட மோட்டார் படகுகளை கொண்டு மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கக்கோரி தேவனாம்பட்டினம் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர் அறிவழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விதிகளை மீறி சுமார் 150க்கும் மேற்பட்ட மீனவர்வர்கள் 240 குதிரை திறன் கொண்ட மோட்டார் படகுகள் கொண்டு மீன் பிடிப்பதால் மீன் வளம் பாதிக்கப்படுகிறது. மீனவர்களின் இந்த விதி மீறல் குறித்து மீன்வளத்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மூன்று முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த, மனுதாரர் கொடுத்த புகார் மனு குறித்து 2 வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு மீன்வளத்துறை இயக்குனர், கடலூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.