×

வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ஆட்டோ டிரைவர் பரபரப்பு புகார்

விருதுநகர் :விருதுநகர், அண்ணாமலை தெருவை சேர்ந்தவர் ராகவேந்திரன். ஆட்டோ டிரைவர். இவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பிய நிலையில், விருதுநகர் கலெக்டர், எஸ்பி அலுவலகங்களில்நேற்று  புகார் மனுவை அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மீனாம்பிகை பங்களா பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். செவல்பட்டியை சேர்ந்த தவசேகர், அப்போது அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியிடம் உதவியாளராக உள்ளேன் என என்னிடம் கூறினார்.

மேலும், ரூ.5 லட்சத்தை ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்தால், உங்களின் மனைவிக்கு நர்ஸ் வேலைக்கான ஆர்டர் ஒரு மாதத்தில் வந்து விடும் எனக் கூறினார். அதை நம்பி மனைவியின் நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சத்தை கடந்த 22.8.2020ல் கொடுத்தேன். ஆனால், இதுவரை வேலைக்கான ஆர்டர் தரவில்லை.
பணத்தை திருப்பி கேட்டால், ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்துள்ளேன் என்கிறார்.

அவர் பணம் கொடுத்தால் தான் தர முடியும். இல்லை என்றால் தர முடியாது என்கிறார். எனவே, தவசேகர் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திரபாலாஜி இருந்தபோது, 1.50 டன் ஸ்வீட் அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பண மோசடி செய்த புகாரும் அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Maji Minister ,Rajendra Balaji , Virdhunagar, Rajendra Balaji, Former Minsiter, AIADMK, Job, Fraud, Auto Driver,
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...