×

வத்தல்மலையில் மீண்டும் சாலை பணிகள் துவக்கம்

தர்மபுரி : தர்மபுரி அருகே வத்தல்மலையில் மீண்டும் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   தர்மபுரி நகரில் இருந்து 19 கிமீ தொலைவில் வத்தல்மலை உள்ளது. இம்மலையில் பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, குள்ளினூர், நாயக்கனூர், அரங்கனூர் உள்ளிட்ட 13 மலைக் கிராமங்கள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வத்தல்மலைப் பகுதியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இங்கு 2011ம் ஆண்டு வரை சாலை வசதி கிடையாது.

வத்தல்மலை கிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதி வழியாக 5 கிமீ தூரம் நடந்து வந்து, அடிவாரத்தில் இருந்து பஸ் மூலம் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், சாலை வசதி செய்து தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலைவாழ் மக்கள் ஒன்று சேர்ந்து மண் சாலை அமைத்தனர்.

 அதன்பின், கடந்த 2011-2012ம் ஆண்டு அடிவாரத்தில் இருந்து வத்தல்மலை மேல் பகுதி வரை ஊரக வளர்ச்சி மற்றும் வனத்துறை சார்பில் 23 கொண்டை ஊசி வளைவுகளுடன் சாலை அமைக்கப்பட்டது. மினி பஸ்வசதி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் மலைவாழ்மக்கள் இருந்தனர். ஆனால் இதில் ஏமாற்றமே மிஞ்சியது. கொண்டை ஊசி வளைவில் பஸ் மினிபஸ் திரும்ப முடியாத வகையில் குறுகலாக சாலை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் மினிபஸ் இயக்க முடியவில்லை.தற்போது இருசக்கர வாகனம், கார், ஜீப் போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன.

மலைக்கிராம மக்கள் கார், ஜீப்பில் செல்ல அதிக கட்டணம் செலுத்தி, இதுவரை தர்மபுரிக்கு வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு அடிவாரத்தில் இருந்து வத்தல்மலையின் மேற்பகுதி வரை சாலை விரிவாக்கப்பணிகள் நடந்தது. கொண்டை ஊசி வளைவு மற்றும் மண்சரிவு ஏற்படும் இடங்களில் சிறிய தரைபாலம் அமைக்கும் பணி நடந்தது. சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்ததால், சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போட்டனர். அதன் பின், தற்போது நேற்று முன்தினம் முதல் சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது. இதனால், மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Wattalmalai , Vathalmalai,Village People,Road Work,
× RELATED மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக...