×

மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்படும் பழங்குடியினர் ஆணையத்திற்கு விரைவில் தலைவர் நியமனம்: வத்தல்மலை கலந்தாய்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தர்மபுரி: மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்கான பழங்குடியினர் ஆணையத்திற்கு விரைவில் தலைவர் நியமிக்கப்படுவார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தர்மபுரி மாவட்டம் வத்தல்மலையில் மலைவாழ் மக்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி வரவேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையினர், மகளிர் என்று பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தார். தொடர்ந்து விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இங்கே நிறையபேர் உங்களை தேடி நான் வந்ததற்கு நன்றி என்றார்கள். ஆனால் உங்களை பார்க்க நான் எப்போதும் ஆர்வமாக உள்ளேன். நேற்றும் இன்றும் சேலத்திலும், தர்மபுரியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு,இங்கு வந்து இருக்கிறேன்.

சேலத்தில் நேற்று வரும் முன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். அது கலைஞர் முதல்வராக இருந்த போது, ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில், செயல்பட்ட ஒரு அரிய திட்டம். இடையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, 10 வருடம் அந்த திட்டம் முடங்கி விட்டது. இப்போது மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நான் எப்போதும் எங்கள் ஆட்சி என்று சொல்வது இல்லை. இது நமது ஆட்சி. தற்போது  மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், குக்கிராமங்களில் கூட முகாம்கள் நடக்கிறது. இங்கே பேசிய சகோதரி ஒருவர், வீடு தேடி மருத்துவம் வந்ததால், தனக்கு இருந்த பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக கூறியது பெருமையாக இருக்கிறது. பணம் இருந்தால் மட்டுமே மருத்துவம் என்ற நிலையை, இந்த அரசு மாற்றியுள்ளது.

தேர்தலுக்கு முன்பு எல்லா கட்சிகளும், அதை செய்வோம், இதை செய்வோம் என்று கூறுவது மரபு. அதை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் திமுக சார்பில், 505 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. இதில் 202 வாக்குறுதிகளை இது வரை நிறைவேற்றி முடித்துவிட்டோம் என்பதை, நெஞ்சை உயர்த்தி சொல்கிறேன். மீதமுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றப்படும். மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்து இருந்தோம். தற்போது அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விரைவில் ஆணையத்திற்கான தலைவர் நியமிக்கப்படுவார்.

 அந்த ஆணையத்தில், உங்கள் குறைகள் அனைத்தையும் தெரிவிக்கலாம். உரிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எல்லோரது கோரிக்கையும் நிறைவேற்றும் அரசாக இது இருக்கும். மக்களின் தேவை அறிந்த நிறைவேற்றும் அரசே திமுக அரசு. மகளிர் சுய உதவிக்குழுக்களை பொறுத்தவரை, தமிழகத்தில் முதல் முறை தர்மபுரியில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்பது வரலாறு. இதற்கு பொறுப்பேற்று துணை முதல்வராக இருந்த காலத்தில், சுழல்நிதி, வங்கி கடன், மானியம் என்று ஒவ்ெவாரு அரசு விழாக்களிலும் நானே, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வழங்கி இருக்கிறேன். இடையில் 10 ஆண்டு காலம் அதுவும் முடங்கிவிட்டது. தற்போது மகளிர் குழுக்கள் மீண்டும் கம்பீரமாக நடமாடும் சூழலை உருவாக்கி இருக்கிறோம்.

 பழங்குடி மக்களான உங்களை வேறுபடுத்தி பார்க்கவில்லை. எங்களில் ஒருவர்தான் நீங்கள். உங்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து ேகாரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்பதை மீண்டும் உறுதியுடன் கூறுகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து பயனாளிகளுக்கு இலவச வீடு, கறவை மாடு, கொரோனா பாதிப்பு நிவாரணம், பசுமை வீட்டிற்கான ஆணை, வேளாண் கருவிகள், இடு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பாப்பாபட்டியில் நாளை கிராம சபை கூட்டம் முதல்வர் பங்கேற்பு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக். 2) தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளைத் தவிர மற்ற மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் நடக்கிறது.  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கிராம மக்களிடம் கலந்துரையாடுகிறார். இதற்காக அவர் நாளை காலை சென்னையில் இருந்து, விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வருகிறார்.

பின்னர் காரில் புறப்பட்டு காலை 9 மணிக்கு உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சிக்கு பின் மதுரை மேலமாசி வீதியில் காந்தியடிகள் அரையாடை தரித்த இல்லத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார்.



Tags : Tribal Commission ,Chief Minister ,MK Stalin ,Wattalmalai Conference , Hill Tracts, Tribal Commission, Chairman Appointed, Wattalmalai
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...