×

சட்டவிரோதமாக தடுப்பணை கட்டிய கர்நாடக அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்து பேசினார். அப்போது அவர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: காய்ந்து வரும் பயிரை காப்பாற்ற உரிய தண்ணீரை கண்காணிப்பு குழு பெற்று தர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் உரிய காலத்தில் கூட்டங்கள் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். மேகதாது அணை கட்டும் வரைவு திட்டம் தயாரிப்பதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதற்கு ஆணையம் தடை விதிக்க வேண்டும். ஆணையத்தின் அனுமதி இல்லாமல் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் நீர் நிர்வாகங்களை மேற்கொள்ள ஆணையம் மூலம் தடை விதிக்க வேண்டும்.  

மத்திய ஜல்சக்தி துறையோ காவிரி குறித்த நிர்வாக அதிகாரங்களில் ஆணையம் அனுமதியின்றி ேநரில் தலையிடுவதை ஆணையம் அனுமதிக்க கூடாது என்பதை தமிழகம் வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அடங்கிய எட்டு பக்க கடிதத்தினை அமைச்சர் துரைமுருகனிடம் கொடுத்தேன். இந்த கடிதத்தின் அடிப்படையில் விரைந்து  நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், நாளை (இன்று) 10 மணியளவில் கிருஷ்ணகிரியில், தென்பெண்ணையாற்றில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள தடுப்பணை கட்டிய கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறேன்.

Tags : Karnataka ,P. R. ,Pandeon , Detention, Government of Karnataka, Demonstration, B.R. Pandian
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...