×

மேம்பாலப்பணிகளுக்கு எம்சாண்ட் பயன்படுத்தும் அனுமதியை சென்னையில் நடக்கும் சாலை பணிகளுக்கு நெடுஞ்சாலைத்துறையே பெற்று தர முடிவு: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் கடந்த ஜூன் 30ம் தேதி ஒப்பந்தாரர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்  நடந்தது. இக்கூட்டத்தில் ஒப்பந்ததாரர்கள், திட்டமதிப்பீட்டில் திருத்த வேண்டும், நெடுஞ்சாலை பணிகளை செய்ய காவல்துறையிடம் துறையே அனுமதி பெற்று தர வேண்டும், ஒப்பந்ததாரர்கள் உரிமம் புதுப்பிப்பதில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக ஆலோசிக்க 3 உயர் அலுவலர்கள் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இந்த குழுவின் முதல் கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தலைமைசெயலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், முதன்மை இயக்குநர் கோதண்டராமன், தலைமைப் பொறியாளர்கள் சாந்தி, சந்திரசேகரன், பாலமுருகன், கண்காணிப்பு பொறியாளர்கள் பழனிவேல், கீதா, கோட்ட பொறியாளர்கள் இளங்கோ, சரவணசெல்வன், ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, ஒப்பந்ததாரர்களின் 22 கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் அதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து விரைவில் அறிக்கை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பாலம் கட்டும் பணிகளுக்கு ஆற்று மணலுக்கு பதிலாக எம்சான்ட்டையே பயன்படுத்தலாம் என்றும், எம் சான்ட்டின் தரத்தினை பொறுத்த வரையில் கண்காணிப்பு பொறியாளரும் மற்றும் தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளரும் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று இக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.

ஒப்பந்ததாரர்கள் பதிவை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கும் முறையை ரத்து செய்து, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. வரும் காலங்களில் பணிகள் துவங்கப்படுவதற்கு முன்னதாக மின் கம்பங்கள் மாற்றுதல், குடிநீர் குழாய்கள் அமைத்தல் போன்றவற்றை சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக  முன்னதாக விரைந்து செயல்படுத்த கேட்டுக்கொள்வது, சென்னையில் சாலை பணிகளை இரவு நேரத்தில் மட்டுமே செய்ய முடியும் என்பதால் காவல் துறையின் முறையான அனுமதியை பெற உள்துறை செயலாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் மூலம் கடிதம் எழுதலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இது போன்ற ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்த பிறகுதான் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட வேண்டும் என்ற அரசு ஆணையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று குழு கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

Tags : Highways Department ,Emsant ,Chennai ,Minister E.V.Velu , Permission to use Emsant for overhead work The decision to get the quality of the highway works for the road works in Chennai: Minister EV Velu information
× RELATED ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3...