சென்னை: தனியார் வசம் இருந்த, காணாமல் போன 196 கோயில்களை அறநிலையத்துறை கையகப்படுத்தி இருப்பது அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கடந்த 1959ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு தனியார் வசம் இருந்த கோயில்கள் அனைத்தும் அறநிலையத்துறை கையகப்படுத்தியது. மேலும், அக்கோயில் வசம் இருந்த லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கட்டிடங்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த நிலங்கள், கட்டிடங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து தான் கோயில்களின் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெரிய கோயில்களைப்போன்று சிறிய கோயில்களுக்கும் ஏராளமான சொத்துக்கள் உள்ளது. ஆனால், சிறிய கோயில்களுக்கு போதிய அளவில் வருமானம் வருவதில்லை. இதனால், அந்த கோயில்களை அறநிலையத்துறை பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் இருந்தது. இதை பயன்படுத்தி கொண்டு, சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் கோயில்களை பதிவேட்டில் இருந்து நீக்கியதாக தெரிகிறது. இதனால், கோயில்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வந்தது. ஆனால், இது தொடர்பாக அறநிலையத்துறைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. இதனால், அந்த கோயிலை கண்டுபிடிக்க முடியாமல் நிலை இருந்தது.
இந்த நிலையில், ஆக்கரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை கண்டறிய சென்னை உயர்நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. இதற்காக அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு சொத்துக்களை கண்டறியும் பணியில் ஈடுபட்ட போது, அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களும் சேர்த்து ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டன. அதன்படி காணாமல் போன 5,544 கோயில்கள் பதிவேடுகளில் இருந்து நீக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த கோயில்களின் கட்டுபாட்டில் உள்ள இருந்த சொத்துக்களை மீட்கும் பணியில் அறநிலையத்துறை இறங்கியது.
ஆனால், முக்கிய பிரமுகர்கள் பலரும் கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்து இருந்ததால் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மீட்பதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் கோயில் நிலங்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். அதன்பேரில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின் பேரில் கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் ஆணையர் குமரகுருபரன் அதிரடியாக ஈடுட்டுள்ளார்.அதன்பேரில், தற்போது மாநிலம் முழுவதம் 80 ஏக்கர் மேல் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அதே போன்று, தனியார் வசம் இருந்த, காணாமல் போன 196 கோயில்களை அறநிலையத்துறை கையகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து, மீட்கப்பட்ட கோயில்களின் விவரங்களை அறநிலையத்துறை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.