×

மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை; தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் துரைமுருகன் அறிக்கை

சென்னை: மார்க்கண்டேய நதியினை சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை  காக்கவும் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழக அரசு உரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கை: மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியுள்ளது என்று பத்திரிகைகளில் செய்து வந்துள்ளது. மார்க்கண்டேய நதி கர்நாடகத்தில் உற்பத்தி ஆகி தமிழ்நாட்டில் பெண்ணையாற்றில் கலக்கும் ஒரு சிறு கிளை நதியாகும்.

2017ல் மத்திய நீர்வள குழுமத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்த போது கர்நாடக அரசு அப்பகுதியில் குடிநீர் தேவைக்காகவும், நிலநீரை செரிவூட்டுவதற்காகவும் சுமார் 0.5 டிஎம்சி கொள்ளளவுள்ள ஒரு அணை கட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2019ல் இந்த அணை அநேகமாக கட்டி முடித்து விட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் இச்செயலை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 18.5.2018 ஒரு அசல் வழக்கும், ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்ததன் பேரில் உச்சநீதிமன்றம் 14.11.2019 அன்று அளித்த தீர்ப்பில் இப்பிரச்னைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

இந்த நடுவர் மன்றத்தை அமைக்க தமிழக அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்துள்ளது. 29.6.21 அன்று தமிழக அரசு மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்திலும் நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தியுள்ளது. இந்த அணையினால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுகாவில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே 4 சிறு அணைகளினால் புஞ்சை பாசன வசதி பெறும் சுமார் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும். தமிழக அரசு விரைவில் நடுவர் மன்றத்தை அமைக்க தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும்.

நடுவர் மன்றத்தின் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும். மார்க்கண்டேய நதியினை சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை காக்கவும் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Karnataka Dam ,Markandeya River ,Tamil Nadu ,Minister Duraimurugan , Government of Karnataka Dam across the Markandeya River; Government will take appropriate action to establish the rights of Tamil Nadu: Minister Duraimurugan report
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...