×

மக்கள் நல்வாழ்வு துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ஆலோசனை

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மருத்துவக் கட்டமைப்புகளை கூடுதலாக மேம்படுத்த அறிவுறுத்தினார். பொதுமக்களின் நலனுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால்  செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத் திட்டங்கள், அரசு மருத்துவமனைகளின்  செயல்பாடுகள், புதிய மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய நிலை உள்ளிட்டவைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  கிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பெருந்தொற்று  காலத்தில் மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப்  பணியாளர்கள் ஆற்றிவரும்  பணிகள், அடுத்த 10 ஆண்டுகளுக்கான  தொலைநோக்குத் திட்டங்கள், ஜைகா, உலக வங்கி போன்ற பன்னாட்டு  நிறுவனங்கள் வழங்கும் நிதி உதவியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும்  திட்டங்கள், இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள்  குறித்து விவாதிக்கப்பட்டது. இதேபோல், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்திடவும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவமனை செயல்பாடுகள், எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், அரசு மருத்துவ நிலையங்களில் உள்ள பணியாளர் காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புதல், உணவுப் பாதுகாப்பு, மருத்துவமனை பராமரிப்பு உள்ளிட்ட  பணிகளை திறம்பட மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு இணைய வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும், தமிழ்நாட்டில் சுகாதார தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். தமிழ்நாட்டில் தரமான மருத்துவமனைகள், திறமைமிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த மாணவர்களை உருவாக்குவதில் சர்வதேச தரத்தை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

Tags : Principal Minister ,Wellbeing Sector Activities ,Q. Stalin , Chief Minister MK Stalin's review of public welfare activities: Advice on improving infrastructure
× RELATED கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு