×

ஸ்ரீ பெரும்புதூர் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ 10.25 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சித்தூர்  : சித்தூர் மாவட்ட எஸ்பி செந்தில் குமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சித்தூர் மாவட்டம், குடிபாலா மண்டலம், குடிபாலா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சித்தூர்- வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளமடுகு கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் வேன் நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் வேனை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். இதையடுத்து வேனை சோதனை செய்ததில் அதில் 6 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் 6 செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அதிலிருந்த திருப்பதி அடுத்த மாருதி நகரை சேர்ந்த நாகராஜ்(40), திருவண்ணாமலை மாவட்டம், சிங்கநாடு கொட்டகரை கிராமத்தை சேர்ந்த ராமராஜ்(23), நந்தனூர் கிராமத்தை சேர்ந்த பிரபு(23), விஜயகுமார்(21), சம்பத்(31), அப்பாசாமி(35), ஜமுனாமரத்தூர் பெருகொல்லை கிராமத்தை சேர்ந்த துரைராஜ்(32) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து, தமிழகம், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகள் பதுங்கி வைத்து விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து டிஎஸ்பி சுதாகர் தலைமையில் போலீசார் பெரும்புதூர் சென்று குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ 10.25 கோடி மதிப்பிலான 353 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அங்கிருந்த வாலிபர் ஒருவரை கைது செய்து மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்த செம்மரக்கட்டைகளை சித்தூருக்கு எடுத்து வந்தனர். மேலும், வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்ட 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது ஏஎஸ்பி ரிசாந்த், டிஎஸ்பி சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

Tags : Kuton ,Sri Muthur , Chithoor,Redwood,Natioanl highways, Vehicle Checking
× RELATED ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோயிலில் தேர் திருவிழா