×

அனைத்து பல்கலைகழகங்களிலும் எம்.பில் கட்டாயம் நடத்த வேண்டும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: அனைத்து பல்கலைக் கழகங்களும் எம்பில் பட்டப் படிப்பை நடத்த வேண்டும்  துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், 13 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.  பல்கலைக் கழகங்களின் நிர்வாகச் செயல்பாடுகள், செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது, மேலும் பிளஸ் 2 மாணவர்களை கல்லூரிகளில் சேர்ப்பது, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் பொன்முடி கூறியதாவது: பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கருத்துகளை கேட்க கூட்டம் நடந்தது. அதில், பல்கலைக்கழக பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் போன்ற நியமனங்கள் உள்பட அனைத்திலும் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்.சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்பில் படிப்பை எடுத்துவிட்டதாக செய்தி வந்தது. எம்பில் வேண்டுமா? வேண்டமா? என்பதில் இரு வேறு கருத்துகள் இருந்தாலும் கூட, எல்லாப் பல்கலைக் கழகங்களும் எம்பில் படிப்பை நடத்த வேண்டும். துணை வேந்தர்களின் கருத்துகளையும்,  மற்றப் பிரச்னைகளையும் கேட்டறிந்து அது குறித்து முதல்வருடன் கலந்து பேசிவிட்டு  அறிவிப்போம்.

பல்கலைக் கழகங்களில் நடந்துள்ள குறைகள் பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு பல்கலைக் கழக நியமனங்களை ஆய்வு செய்யும். பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு  இந்த ஆ ண்டும் வழக்கம் போல தொழில் நுட்ப கல்வி இயக்ககம்  தான் நடத்தும்.

அட்மிஷன்... ரிசல்ட் ஆகஸ்ட் 1ம் தேதி
சிபிஎஸ்இ, தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். ஏற்கெனவே ஆகஸ்ட் 1ம் தேதி கல்லூரிகளில்  மாணவர்கள் சேர்க்கை தொடங்கும். அதிலும் எல்லாப் பல்கலைக் கழகங்களும் ஒரே சீராக, ஒட்டுமொத்தமாக ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் தேர்வு  முடிவுகளை அறிவித்து, ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து  மாணவர்  சேர்க்கையை தொடங்கும் பணியில் முழுமையாக  ஈடுபட வேண்டும்.

Tags : M.Phil ,Minister ,Ponmudi , Compulsory M.Phil in all universities: Minister Ponmudi's announcement
× RELATED ஜாமீன் பெற கால அவகாசம் கேட்டு அமைச்சர்...