×

கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையம் துவக்கம் மக்களுக்கான அரசு மட்டுமல்ல மருத்துவர்களுக்கான அரசும் கூட: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி நிலையத்தில் கொரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மருத்துவர் தின விழாவில் கொரோனா காலத்தில் மகத்தான பணிபுரிந்த டாக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள அரசு கொரோனா மருத்துவமனையில், சட்டமன்ற பேரவையில்  ஆளுநர் உரைக்கு அளித்த பதிலுரையில் அறிவித்தவாறு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்த மையத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு இருதயம், நரம்பியல், சிறுநீரகம், வயிறு மற்றும் குடல், கண், நீரழிவு,  உளவியல் தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றிற்கான வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, இந்த வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, வெளிநாடு செல்பவர்களுக்கான மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணியினை பார்வையிட்டார். இந்த மையம், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மையத்தில், சர்வதேச பயணிகளுக்கு பன்னாட்டு சுகாதார ஒழுங்குமுறை சட்டத்தின்படி ஆப்பிரிக்க மற்றும்  தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு 1948-ல் இருந்து மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்தும் செலுத்தப்பட்டு, உலக சுகாதார நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தென் இந்திய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரே தடுப்பூசி மையமாக இது விளங்குகிறது. மேலும், ஹஜ் பயணம் மேற்கொள்வோர்க்கு மூளை காய்ச்சல் தடுப்பூசியும் இந்த மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னர் சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மருத்துவர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று, அரசு மருத்துவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை மருத்துவ கல்வி இயக்குநர், மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர், மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் ஆகியோருக்கும், தனியார் மருத்துவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சங்கங்களுக்கும் வழங்கி கவுரவித்தார்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி இன மக்களுக்கும், தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் 100 சதவிகித தடுப்பூசி போடப்பட்டு, இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை விளங்கிட செய்த நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யாவுக்கு முதல்வர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் 55,000 பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகளை சுகாதார துறை பணியாளர்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் வழங்கினார். மாநில தலைநகரம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகளை விளக்கும் குறும்பட தகட்டினையும் வெளியிட்டார்.

கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் ஒருநாள் சம்பள தொகையான 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம்,  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷைய்யன் வழங்கினார்.  

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, இன்று மருத்துவர் தினம். இந்த அரசைப் பொறுத்தவரையில் மக்கள் நலனுக்கான அரசு மட்டுமல்ல, மருத்துவர்கள் நலனுக்கான அரசாக உங்களுக்கு என்றும் துணை நிற்கும் என்பதை எடுத்துச் சொல்லி, மருத்துவ தின விழாவில் உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பு பெற்றதற்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி, உங்களுடைய தியாகத்திற்கும் தொடர்ந்து ஆற்றக்கூடிய பணிகளுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி என்று பேசினார். விழாவில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தாயகம் கவி எம்எல்ஏ, டி.கே. ரங்கராஜன் எம்பி, மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Post-Corona Welfare Center ,King's Institute ,Government ,the People ,MK Stalin , King's Institute, Corona, Physician, Principal, MK Stalin
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...