×

அதிமுக ஆட்சியில் தொற்று அதிகமாக இருந்தபோது டாஸ்மாக் திறந்த நிலையில் கொரோனா குறைவான 27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை துவக்கினோம். கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், மீண்டும் அம்மா மினி கிளினிக்குகளில் டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். அமைச்சர் மா.சுப்பிரமணியன் : 2 ஆயிரம் கிளினிக்குகளில் 10 கிளினிக்குகளை சென்று பார்த்திருந்தால் அவர்களுக்கு தெரிந்து இருக்கும். சின்ன கழிவறை இருந்தால் அதை இடித்து விட்டு கிளினிக்குகளாக மாற்றியுள்ளனர். சிறிய அறை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் மாநகராட்சி, நகராட்சிகளின் வேறு பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட கட்டிடங்களை பெயிண்ட் அடித்து அம்மா மினி கிளினிக்குகள் என்று மாற்றியுள்ளனர். அதற்கு தேவையான மருத்துவர்களை அவர்கள் எடுக்கவில்லை. இந்த ஒன்றரை மாதத்தில் கொரோனா தடுப்பு பணிக்கென மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என மொத்தம் 14 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி : முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டன. எங்கெல்லாம் இடம் உள்ளதோ அங்கெல்லாம் இடம் தேர்வு செய்து மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டது. அதிமுக ஆட்சிகாலத்தில் 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் 10 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் 35 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். கொரோனா தடுப்பு பணியில் அதிமுக ஆட்சியில் தேவையான டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்த போது, சென்னையில் 3 மருத்துவமனைகளில் ஐசியு வார்டுக்கு சென்று, பாதிக்கப்பட்ட நோயாளிகளை விசாரித்து ஆறுதல் கூறினார். 7.5.20ம் தேதி மு.க.ஸ்டாலின் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கூறி தமிழ்நாடு முழுவதும் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது, தினசரி பாதிப்பு 550 ஆக இருந்தது. 2 பேர் தான் உயிரிழந்தனர். இப்போது, தினசரி பாதிப்பு 12,772 பேராக உள்ளது. ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிப்பு அதிகரிக்கும் அச்சம் உள்ளது.  அமைச்சர் செந்தில் பாலாஜி ; கடந்த ஆட்சியில் 7.5.20 மதுபான கடைகள் திறந்த போது அந்த நோய் ெதாற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.1 சதவீதம். 8ம் தேதி 4.3 சதவீதம். 8ம் தேதி கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அதிமுக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று மதுக்கடைகளை திறந்தது. 23.5.20ல் கடைகள் திறக்கப்பட்டன. 25.5.20 6.8 சதவீதம் பாதிப்பாக உள்ளது. 30.5.20 9 சதவீதம். 8.6.20 10.4 சதவீதமாக இருந்தது. நோய் தொற்று சதவீதம் அதிகரித்த போது மதுக்கடைகளை திறந்த அரசு முந்தைய அரசு.

ஆனால், இன்று தொற்றை குறைக்க நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டன. நோய் ெதாற்று 3 வகையாக மாவட்டங்களில் பிரிக்கப்பட்டன. 27 மாவட்டங்களில் நோய் தொற்று குறைவான பகுதிகளில் மட்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டன. 14ம் தேதி மதுக்கடைகளை திறக்கும் போது, 5.4 சதவீதம் தான். நேற்றைய கணக்கெடுப்பின் படி 2.8 சதவீதம். 5 சதவீதம் மேல் இருக்க கூடிய 11 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. அந்த மாவட்டங்களில்  நோய் தொற்று குறைந்தாலும் திறக்கப்படவில்லை.2 சதவீதம் குறைந்தால் அந்த மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படும். ஏதோ இந்த ஆட்சிக்காலத்தில் நோய் தொற்று அதிகரிப்பதால் மதுக்கடைகள் திறக்கப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட பிறகு நோய் தொற்று அதிகரித்து இருந்தது.  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி : அதிமுக அரசு இருக்கும் போது 7 ஆயிரம் பேர் தான் உச்சபட்சமாக பாதிக்கப்பட்டனர். ஆனால், இன்றைக்கு 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை மறைத்து தான் நீங்கள் சதவீதமாக கூறுகிறீர்கள்.  அமைச்சர் செந்தில் பாலாஜி ;  18.6.21ம் தேதியில் 1.79 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 14 ஆயிரம் பேருக்கு எடுத்ததில் 10 சதவீதம், 1.70 லட்சம் பேரில் 3.6 சதவீதம் தான். சேலம் மாவட்டத்தில் கடந்த காலத்தில் 1,500 பேருக்கு தான் பரிசோதனை. ஆனால், தற்போது 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மதுபான கடைகளை பொறுத்தவரையில் 2.8 சதவீதம் குறைந்ததன் அடிப்படையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Minister ,Senthil Balaji ,Leader of the Opposition ,Edappadi ,Tasmag ,Corona ,AIADMK , AIADMK regime, Tasmag, Corona, liquor store, Opposition leader Edappadi
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட...