×

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.17 வரை நீட்டிப்பு..!!

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த முறை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் 32-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.17 வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : minister ,Sendil Balaji ,Chennai ,Former Minister ,Senthil Balaji ,ENFORCEMENT DEPARTMENT ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...