×

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் அளிப்பது அநீதி இழைப்பதற்கு சமம்: பொதுத்தேர்வு நடத்த உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்குவது அநீதி இழைப்பதற்கு சமமாகும்’ என உச்ச நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.   கொரோனா இரண்டாம் அலை காரணமாக சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு. பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் விகிதாச்சார அடிப்படையில், அதாவது வெயிட்டேஜ் முறையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் மதிப்பெண் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  இந்த மதிப்பெண் கணிக்கீட்டு முறையை எதிர்த்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கங்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங்,‘‘மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண். அதனால் வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்கப்படும் என்ற சிபிஎஸ்இ நிர்வாகத்தின் நடைமுறையை மாணவர்கள் விரும்பவில்லை. அதில் அவர்களுக்கு திருப்தியும் கிடையாது. இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக தான் கருதுகிறார்கள். கொரோனா பரவல் தற்போது நாடு முழுவதும் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை முகக்கவசம் அணிந்தும், அதிகப்படியான மையங்களை அமைத்தும், கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் தேர்வுகளை நடத்தலாம். மாணவர்களின் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்த வேண்டும்’ என வாதிட்டார்.  இதுகுறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்துக்களை கேட்க வேண்டியது அவசியம் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.

தனித்தேர்வர்கள் வழக்கில் இன்று விசாரணை
சிபிஎஸ்இ 12ம் வகுப்பின் கம்பார்ட்மென்ட் தேர்வுகள், தனித் தேர்வுகள் மற்றும் மறுத்தேர்வு ஆகியவற்றையும் கொரோனா காலத்தை அடிப்படையாகக் கொண்டு ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி 1,152 மாணவர்கள் தொடர்ந்த மனுக்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆகியவற்றையும் ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் ஒன்றாக இணைத்து இன்று விசாரிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : CBSE ,Supreme Court , Weightage scoring for CBSE Class XII students is tantamount to injustice: Supreme Court urges general elections
× RELATED திருப்புத்தூர் அருகே மவுண்ட் சீயோன்...