வங்கியில் ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக ரூ.1.50 கோடி பணம் பெற்று ஹரி நாடார் மோசடி: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குஜராத் தொழிலதிபர் புகார்

சென்னை: வங்கியில் ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக ரூ.1.50 கோடி மோசடி செய்ததாக பனங்காட்டு படை கட்சி தலைவர் ஹரி நாடார் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குஜராத் தொழிலதிபர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஏற்றுமதி தொழில் செய்து வரும் தொழிலதிபர் இஸ்மாயில் சக்ராத்(51) அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் குஜராத் மற்றம் கத்தரில் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஏற்றுமதி தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் எனக்கு பணம் தேவைப்பட்டது. அப்போது பெங்களூரை சேர்ந்த முகம்மது அலி மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த அருள்ராஜ் ஆகியோர் மூலம் ஹரி நாடார் பழக்கமானார். என்னிடம் 6 விழுக்காடு வட்டிக்கு லோன் வாங்கி தருவதாக கூறினார்.

அதன்படி எனக்கு ரூ.100 கோடி பணத்தை வங்கியில் கடன் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதற்காக ரூ.100 கோடிக்கு வரியாக ரூ.2 கோடியும், மேலும் தனக்கு கமிஷனாக ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி கடந்த பிப்ரவரி 2ம் தேதி தனியார் வங்கி ரூ.100 கோடி கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தது போல் எனது பெயரில் இ-மெயில் ஒன்று அனுப்பினார். அடுத்த நாள் சென்னை தி.நகரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் அவர் கேட்டப்படி ரூ.25 லட்சம் கமிஷன் கொடுத்தேன். அதன்பிறகு ரூ.100 கோடிக்கு வரியாக அவர் கூறியபடி இரண்டு தவணையாக ரூ.1.25 கோடி பணம் கொடுத்தேன்.

அதன்பிறகு அவர் சொன்னப்படி ரூ.100 கோடி கடன் வாங்கி தரவில்லை. இதுகுறித்து ஹரி நாடாரிடம் கேட்டபோது முறையான பதில் இல்லை. உடனே நான் எனக்கு லோன் தேவையில்லை நான் கொடுத்த ரூ.1.50 கோடி பணத்தை திரும்ப கொடுக்கும் படி கூறினேன். அதற்கு அவர் ஆலங்குளம் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடுவதாகவும், தேர்தலுக்கு பிறகு உங்கள் பணத்தை தருவதாக கூறினார். இந்நிலையில் மோசடி வழக்கு ஒன்றில் பெங்களூர் போலீசார் அரி நாடாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனவே, வங்கியில் ரூ.100 கோடி கடன் வாங்கி தருவதாக நம்பவைத்து ரூ.1.50 கோடி பணம் பெற்று மோசடி செய்த ஹரி நாடார் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.

Related Stories:

>