×
Saravana Stores

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பைனலில் ஜோகோவிச்சுடன் இன்று சிட்சிபாஸ் பலப்பரீட்சை

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின்  ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச்சுடன் இளம் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் இன்று மோதுகிறார். முதல் அரையிறுதியில்   ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் (6வது ரேங்க்) மோதிய சிட்சிபாஸ் (கிரீஸ், 5வது ரேங்க்) 6-3, 6-3, 4-6, 4-6, 6-3 என 5 செட்களில் கடுமையாகப் போராடி வென்ற முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 37 நிமிடத்துக்கு நடந்தது. இதைத் தொடர்ந்து 2வது அரையிறுதியில் சாதனை வீரர்கள் ஜோகோவிச் - நடால் மோதினர். நடப்பு சாம்பியனும், பிரெஞ்ச் ஓபனில் 13 முறை பட்டம் வென்றவருமான நடால் முதல் செட்டில் அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 5-0 என முன்னிலை பெற்றார்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் கடும் நெருக்கடி கொடுத்தாலும் அந்த செட்டை 6-3 என கைப்பற்றிய நடால் முன்னிலை பெற்றார். அடுத்த செட்டை ஜோகோவிச் 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ள... 3வது செட்  டை பிரக்கர் வரை இழுபறியாக நீண்டது. அதில் ஜோகோவிச்  கடுமையாகப் போராடி 7-6 (7-4) என்ற கணக்கில்  வென்றதுடன் 4வது செட்டை 6-2 என கைப்பற்றி 5வது முறையாக பைனலுக்கு முன்னேறினார். 4 மணி, 11 நிமிடத்துக்கு நீடித்த இப்போட்டி டென்னிஸ் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமைந்தது. நடப்பு தொடரில் அதிக நேரம் நீடித்த ஆட்டமும் இதுதான். பிரான்சில் இரவு 11.00 மணிக்குப் பிறகு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரசிகர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கி பிரதமர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பைனலில் நடாலிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்த ஜோகோவிச் கூறுகையில், ‘எனது டென்னிஸ் வாழ்க்கையின் டாப் 3 ஆட்டங்களில் இதுவும் ஒன்று. என்றென்றும் மறக்க முடியாத போட்டி’ என்றார். 14வது முறையாக பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இந்த ஆண்டு நழுவவிட்ட நடால் ஏமாற்றத்துடன் வெளியேறினார். இன்று இரவு நடக்கும் பைனலில்  ஜோகோவிச் -  சிட்சிபாஸ் மோதுகின்றனர். இங்கு ஜோகோவிச் 2016ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், சிட்சிபாசுக்கு இது முதல் பைனலாகும். கடந்த ஆண்டு அரையிறுதியில்  ஜோகோவிச்சுடன் மோதிய சிட்சிபாஸ் 2-3 என்ற செட் கணக்கில் தோற்றார்.  இருவரும் 7 முறை மோதியுள்ளதில் ஜோகோவிச் 5 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறார்.



Tags : Tsitsipas ,Djokovic ,French Open Grand Slam , Tsitsipas face Djokovic in French Open Grand Slam tennis men's singles final today
× RELATED சில்லி பாய்ன்ட்…