×

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் ஜூலையில் தொடக்கம்; ‘காண்டம்’ கொடுப்பாங்களாம்... ஆனா ‘யூஸ்’ பண்ணக் கூடாதாம்..! ஐஓசி-யின் 33 பக்க ‘ரூல் புக்’கை பார்த்து வீரர்கள் கடுப்பு

டோக்கியோ: கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலையில் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆணுறை வழங்கப்படும் என்றும், ஆனால் அவர்கள் அதனை பயன்படுத்தக் கூடாது என்றும் ஒலிம்பிக் ரூப் புக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீரர்கள் கடுப்பாகி உள்ளனர். சர்வதேச விளையாட்டு அரங்கில், ஒலிம்பிக் போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்தாண்டு ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெற இருந்த  போட்டிகள், கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக ஓராண்டு  தள்ளிப்போடப்பட்டது.

நோய்த்தொற்று இன்னும் கட்டுக்குள் அடங்காத நிலையில்,  டோக்கியோ - 2020 ஒலிம்பிக் போட்டி எப்படி நடக்கப் போகிறது? என்கிற கேள்வி  எழுகிறது. ஆனால், வரும் ஜூலை 23ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், கிட்டதிட்ட 205 நாடுகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் 11,000க்கும் மேற்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள், போட்டியை நடத்தத் தேவையான ஊழியர்கள் போன்றோர்  டோக்கியோ நகரில் குவிய உள்ளனர். மூன்று வாரம் நடக்கும் ஒலிம்பிக் போட்டியால், சர்வதேச அளவில் நோய்த்தொற்றுப் பரவல் மிகப் பெரிய அளவில் அதிகரித்துவிடக் கூடிய ஆபத்து காத்திருக்கிறது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இருந்தும் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக வீரர்களுக்கு ஆணுறை எனப்படும் ‘காண்டம்’ வழங்குதல் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக தடகள வீரர்களை போன்ற திடகாத்திரமான ஆண்களுக்கு உடலில் செக்ஸ்  ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் என்பதால், அவர்கள் உடலுறவில்  ஈடுப்படுகின்றனர் என்றும், அவர்களின் மன அழுத்தம் குறைய  வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஒலிம்பிக்கில் வீரர்களுக்கு ஆணுறை இலவசமாக  வழங்குவது பாரம்பரிய முறையாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், அதிகமாக உடலுறவில் ஈடுபட்டால், அது வீரர்களின் கவனத்தை சிதறடிக்கும்  என்று பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கர்ப்ப தடை மற்றுமின்றி ‘எயிட்ஸ்’ ஏற்படாமல் பாதுகாக்கவும் ஆணுறை பயன்படுத்தப்படுகிறது. கடந்த 1988ம் ஆண்டில் சியோல் ஒலிம்பிக்கில் முதன்முதலில் விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகள்  வழங்கப்பட்டன. தொடர்ந்து அனைத்து ஒலிம்பிக் போட்டியிலும் வீரர்களுக்கு ஆணுறைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது, 4.5 லட்சம் ஆணுறைகள் உபயோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, சராசரியாக ஒவ்வொரு விளையாட்டு வீரரும் 42 ஆணுறை  பயன்படுத்தியிருக்கலாம் என்கின்றனர். அதே, 2008ல் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது 4 லட்சம் ஆணுறை பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

சில வீரர்களுக்கு ஆணுறை பற்றாக்குறை ஏற்பட்டதால், அவர்கள் தங்கள் சொந்த செலவில் ஆணுறையை வாங்கி பயன்படுத்தினர். இந்த நிலையில் டோக்கியோவில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஆணுறை விநியோகம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி - 2020 (ஐஓசி) வெளியிட்டுள்ள 33 பக்க ‘ரூல் புக்’ கையேட்டில், ‘கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அச்சத்தால் ஓராண்டு தாமதத்திற்குப் பிறகு வரும் ஜூலை 23ம் தேதி டோக்கியோவில் பாரம்பரிய ஒலிம்பிக் போட்டி தொடங்கும். விளையாட்டு வீரர்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் சுமார் 15 ஆணுறைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 1,60,000 ஆணுறைகள் விநியோகிக்கப்படும். ஆனால், வழங்கப்பட்ட ஆணுறைகளை வீரர்கள் பயன்படுத்தக் கூடாது. வீரர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால், உடல் ரீதியான அரவணைப்பு மற்றும் கைகுலுக்குதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். ஒலிம்பிக் கிராமம் மிகப்பெரிய கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக இருக்கும். ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைகளை விநியோகம் செய்வது அவர்கள் பயன்படுத்துவதற்காக அல்ல; வீரர்கள் அதனை தங்களது சொந்த நாடுகளுக்கு கொண்டு சென்று பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு ஆணுறை வழங்குவதன் மூலம், கொரோனா விதிமுறைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க முடியும் என்று நம்புகிறோம்.

விளையாட்டு வீரர்கள் நான்கு நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கொரோனா ‘பாசிடிவ்’ உறுதிசெய்யப்பட்டால், அவர்கள் போட்டியில் பங்கேற்க முடியாது. வீரர்கள் ஜப்பானுக்கு வந்தவுடன் அவர்கள்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுத்தமாட்டார்கள். போட்டி தொடங்குவதற்கு  முன்பு பயிற்சி முகாம்களில் அவர்கள் பங்கேற்கலாம்.   ஜப்பானில் இருந்து விமானங்களில் தங்களது நாட்டிற்கு வீரர்கள் செல்லும் முன், அவர்களுக்கு கொரோனா ‘நெகடிவ்’ உறுதிசெய்யப்படும். அதன் பின்னரே அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர். விளையாட்டு வீரர்கள் சுற்றுலா தலங்கள், கடைகள்,  உணவகங்கள், மதுக்கடைகள் போன்றவற்றை பார்வையிடவோ, அங்கு தங்கவோ தடை விதிக்கபடுகிறது.

போட்டி, பயிற்சி, உணவு, ஓய்வெடுக்கும் காலங்கள் தவிர மற்ற நேரங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்’ என்பது போன்ற விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எப்படியாகிலும், ஆணுறையை கையில் கொடுத்துவிட்டு, அதனை பயன்படுத்தக் கூடாது என்று ஐஓசி அறிவித்து இருப்பது, வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிலர் இந்த அறிவிப்பை காமெடியாகவும் விமர்சித்து வருகின்றனர். ஆணுறை வீரர்களுக்கு வழங்கப்பட்டாலும் கூட, பார்வையாளர்களும் ஆணுறையை தங்களது சொந்த செலவில் வாங்கி, ஒலிம்பிக் கிராமம் முழுவதும் சந்துபொந்து இடங்களில் எல்லாம் ஜோடி ஜோடியாக சென்று உல்லாசமாக இருப்பர்.

ஆனால், இந்த கொரோனா கெடுபிடிகளால் வீரர்கள் மற்றுமின்றி அனைவரும் உல்லாசத்தை அனுபவிக்க முடியாத சூழலை நினைத்து பெரும் கவலையில் உள்ளனர். கடந்த 1988ம் ஆண்டில் நடந்த சியோல் ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்களுக்கு முதன்முதலில் ஆணுறைகள் வழங்கப்பட்டன.

Tags : Olympics ,Corona ,IOC , Olympic July postponed by Corona begins in July; ‘Condom’ can be given ... but ‘use’ should not be done ..! Players look at the IOC's 33-page Rule Book
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: தொடர் ஓட்டத்தில்...