×

குறையாத இறப்பு எண்ணிக்கை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அரசு விதிகளை மதிக்காத பொதுமக்களால் காத்திருக்கும் விபரீதம்

சென்னை: முழு ஊரடங்கை மதிக்காத பொதுமக்களால் தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை குறையாமல் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தளர்வுகள் அளித்தால் கொரோனா மரணங்கள் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் 2ம் அலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வரும் 7ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ளது.

தமிழகத்தில் அரசின் துரித நடவடிக்கைகளால் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும், கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதற்கு வேறு யாரும் காரணமல்ல, பொதுமக்கள் தான். முழு ஊரடங்கில் எத்தனையோ கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டும், துளி அளவும் மதிக்காமல் நடந்து கொள்ளும் மக்களால் தான் நோய் தொற்றின் எண்ணிக்கை குறையவில்லை என்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

நோயின் தீவிரத்தை உணர்ந்து வீடுகளுக்கு முடங்கி இருக்காமல் ஏதாவது ஒரு காரணத்தை கூறி வெளியில் வருகின்றனர். சிலர் நண்பர்களுடன் சுற்றுவது, ஏதாவது ஒரு கட்டிடங்கள் அல்லது வெளிப்பகுதிகளில் ஒன்று கூடுவது மற்றும் அருகில் வசிக்கும் வீடுகளில் இருப்பவர்களுடன் ஒன்றாக கூடி கதையடிப்பது, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதாக கூறிக் கொண்டு ஒவ்வொரு கடையாக ஏறி இறங்குவது, ஏதாவது ஒரு மெடிக்கல் ரிப்போர்ட்டை காட்டிக் கொண்டு தங்கள் வாகனங்களில் வேறு பகுதிகளுக்கு செல்வது, மற்றவர்களை சந்தித்து பேசுவது, அன்றாட தங்கள் பணிகளில் ஈடுபடுவது, இப்படி கட்டுப்பாடுகளை மறந்து சுற்றுவதால் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர்.

அவர்களோடு போகப் போகிறதில்லை. வீட்டில் உள்ளவர்களுக்கும், அருகில் வசிப்பவர்கள் என ஒரு பெரிய தொற்று பரவலுக்கே வழிவகுக்கின்றனர். இதுபோன்றவர்களின் அலட்சியப் போக்கால் நோய் தொற்றுக்கான சங்கிலியை உடைக்க முடியவில்லை. இதனால் தான் தினசரி தொற்று எண்ணிக்கை பெரிய அளவில் இன்னும் குறையாமல் உள்ளது. முழு ஊரடங்கு என்பது நமக்காக போடப்பட்ட ஒன்று. எந்த அளவுக்கு கட்டுப்பாடுகளை மதித்து நடக்கிறோமோ அந்த அளவுக்கு தான் அதன் பலன் இருக்கும். இதை பொதுமக்கள் உணர்ந்து, அனைவரும் முறையாக கடைபிடித்திருந்தால் இத்தனை நாட்களுக்குள் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்திருக்கும்.

அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கலாம். ஆனால் அலட்சியத்துடன் செயல்படும் பொதுமக்களால் முழு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. அனைத்து பணிகளை முடுக்கி விட்டு அதி தீவிர களப்பணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அமைச்சர்களும், அதிகாரிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் பொதுமக்களின் அலட்சிய போக்கால் தான் கொரோனாவுக்கு பலரை இழக்க வேண்டி நிலை உருவாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வரும் 7ம்தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைகிறது.

கொரோனா 2வது அலை பாதிப்பை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே 3வது அலையை வராமல் தடுக்க முடியும். இல்லையெனில் அடுத்த அலையில் பாதிப்புகள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். ஆனால் ஊரடங்கு விதிமுறைகளை எதையும் முழுமையாக கடைபிடிக்காமல் அலட்சியமாக செயல்படும் பொதுமக்களால் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல வேண்டியுள்ளது. நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை காக்கவே தமிழக அரசு முழு ஊரடங்கை போட்டுள்ளது.

அதை மதிக்காமல் அட்சியப்படுத்தினால் பாதிப்பு முழுவதும் அலட்சியப்படுத்தும் பொதுமக்களுக்கு தான் என்பதை அவர்கள் உணர்ந்தால் தான் முழு ஊரடங்கிற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியும். தளர்வுகள் அளித்தால் அதை பயன்படுத்தி வெளியில் வரத்தான் பார்க்கின்றனரே தவிர அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இன்னும் வரவில்லை. இதே நிலை நீடித்தால், மக்களை பாதுகாக்கும் ஒரே ஆயுதம் முழு ஊரடங்கு மட்டுமே. அதை மட்டுமே செயல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக அரசு தள்ளப்படும். எனவே இதை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதனால் முழு ஊரடங்கை நீட்டிப்பதும், தளர்த்துவதும் பொதுமக்களின் கையில் தான் உள்ளது. இதில் எதை தேர்வு செய்வது என்பதை பொதுமக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.

Tags : Tamil Nadu , Will the curfew be extended in Tamil Nadu to reduce the death toll? The tragedy that awaits the public who do not respect government rules
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...