×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 நீரிழிவு நோயாளிகளுக்கு கறுப்பு பூஞ்சை நோய்: சென்னையில் பல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: டாக்டர் ஆலோசனையின் படி மருந்து உட்கொள்ளவும்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 நீரிழிவு நோயாளிகள் கறுப்பு பூஞ்சை நோயால் பாதித்துள்ளனர். மேலும் டாக்டர்கள் ஆலோசனையின் படி மருந்து உட்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.இந்தியாவில், சமீப காலமாக, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருபவர்கள் அல்லது மீண்ட நோயாளிகள், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும், ஐந்து நீரிழிவு  நோயாளிகள், கறுப்பு பூஞ்சை நோயால் பாதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள். இதையடுத்து  சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நோய், காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்க கூடியது என்பதால், மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், சென்னையில் உள்ள, பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பூஞ்சை தொற்று காரணமாக, கறுப்பு பூஞ்சை அல்லது மியூகோர்மைகோசிஸ் நோய் ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் உள்ள பூஞ்சை வாயிலாக, கறுப்பு பூஞ்சை மனிதர்களுக்கு பரவுகிறது. வெட்டு, தீக்காயங்கள் வாயிலாக தோலில் நுழையும் பூஞ்சை பின், தோலின் மீது மேலும் பரவுகிறது. சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, கறுப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது. தீவிர தொற்று, ஆக்சிஜன் குறைபாடு, அதிகளவில் ஸ்டீராய்டு, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் கொரோனா நோயாளிகளை எளிதில், கறுப்பு பூஞ்சை நோய் தாக்கும். இந்நோய் கொரோனா தொற்றுடன் இருக்கும்போதும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த பின் தாக்க கூடியது. கடுமையான தலைவலி, கண்களில் வீக்கம், கண்கள் சிகப்பு நிறமாக மாறுதல், திடீரென பார்வை குறைதல், சைனஸ் பிரச்னை, மூக்கில் வலி, வாய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கறுப்பாக மாறுதல் போன்றவை, இதற்கு அறிகுறிகளாக உள்ளன.இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய தவறினால், கண் பார்வை குறைபாடு, வாய், மூக்கு, தொண்டை பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். எனவே, சர்க்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு டாக்டரின் ஆலோசனைப்படி, மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தமிழகத்தில், கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், பாதிப்பு குறித்து, மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதற்கான மருத்துவ முறைகள் குறித்தும், மத்திய அரசு விரைவில் வழிகாட்டுதல் வழங்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர். …

The post கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 நீரிழிவு நோயாளிகளுக்கு கறுப்பு பூஞ்சை நோய்: சென்னையில் பல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: டாக்டர் ஆலோசனையின் படி மருந்து உட்கொள்ளவும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...