×

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.28 லட்சத்துடன் சிக்கிய வாலிபர்: ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இடுப்பில் ரூ.28 லட்சத்தை மறைத்து எடுத்து வந்த வாலிபரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை ரயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஐதராபாத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை எண் 3ல் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது, அவரது இடுப்பில் எதையோ கட்டிக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. அவரது சட்டையை கழற்றி பார்த்தபோது, இடுப்பில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுகளை துணியால் சுற்றி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதில் ஒரு கட்டில் 200 எண்ணிக்கையில் ரூ.2000  என 7 கட்டுகள் இருந்தது. இது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த கோணகந்தியா சந்திரசேகர் (21) என்பதும், அவர் குண்டூரில் ஒரு நகைக்கடையில் வேலை செய்வதாகவும், சென்னையில் குமார் என்பவரிடம் இந்த பணத்தை கொடுக்க வந்ததாகவும், பணத்தை கொடுத்ததும் அவர் ரயில் டிக்கெட் கொடுப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த ரயில் டிக்கெட் மூலம் மீண்டும் குண்டூர் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினமும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ரயிலில் வந்து சென்றதுக்கான டிக்கெட்டும் அவரிடம் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள், 7 கட்டுகளில் இருந்த ரூ.28 லட்சத்தை பறிமுதல் செய்து, அந்த பணம் தொடர்பாக அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Walipur ,Central Railway Station , Walipur caught with Rs 28 lakh at Central Railway Station: Railway police investigation
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!