கொரோனா நிவாரண பணிகளுக்காக திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் ரூ.1.37 கோடி முதல்வரிடம் வழங்கப்பட்டது

சென்னை: கொரோனா நிவாரண பணிகளுக்காக திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் ரூ.1.37 கோடி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்று கூறும் நிலை இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டன.

அடுத்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்ற நிலை தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நிவாரண பணிகளுக்கான தொழிலதிபர்கள், பொதுமக்கள் தமிழக அரசுக்கு தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பல தொழிலதிபர்கள், பொதுமக்கள் அரசுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள்.

தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, திமுக எம்எல்ஏக்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை, தலைமை செயலகத்தில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் நேற்று சந்தித்து, கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பள தொகையான ரூ.1 கோடியே 37 லட்சத்து 55 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

Related Stories: