×

தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் 60 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

தண்டையார்பேட்டை: கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி தேவைப்படுவதால் அதற்காக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் 60 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை, திமுக இளைஞரணி செயலாளரும்,  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி. எம்எல்ஏக்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி, சென்னை மாநகராட்சி 4வது மண்டல அதிகாரி வெங்கடேசன், மண்டல சுகாதார நல அலுவலர் டாக்டர் சாய் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த மாணவி சங்கீதா, கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் வழங்கினார். இதேபோல், முதியோர் ஓய்வூதியத்திலிருந்து பிரேஷ் செபாஸ்டின் என்பவர் ₹20 ஆயிரமும் , மாணவி வைதேகி என்பவர் 2,100, பார்வையற்ற முதியவர்  விஸ்வநாதன் என்பவர் 9560, முதியவர் அப்துல் ரஷீத் என்பவர் 10 ஆயிரம் என  முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். தொடர்ந்து, முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் டி. எஸ். டி.ராஜா பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் அவசர ஊர்தி வழங்கப்பட்டது. அதனை உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Tags : Corona treatment ,Thandayarpet Government Hospital ,Udayanithi Stalin , Corona treatment center with 60 oxygen beds at Thandayarpet Government Hospital: Udayanithi Stalin opens
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...