லக்னோ: வீட்டை ஐ.சி.யு வார்டாக மாற்றி பலரிடம் பணம் பறித்த போலி டாக்டரான அரசுப்பள்ளி ஆசிரியரை உத்தரபிரதேச போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி அடுத்த சபர்தர்கஞ்சில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர் சிவேந்திர படேல் (45). இவர், லக்னோவில் வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். ‘நவியா க்யூர் மெடிக்ஸ்’ என்ற பெயரில் மருத்துவ மையத்தை நடத்தி வந்தார். இந்நிலையில், இவரது மருத்துவமையத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி குஷ்புவிடம், ஏழு நாட்களில் இரண்டு லட்சம் ரூபாய் மருத்துவ கட்டணமாக வசூலித்துள்ளார்.
இருந்தும் தனது கணவரது நிலைமை மோசமடைந்து சென்றதால், அவரை டிஆர்டிஓ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவரது கணவர் இறந்தார். மேலும் சிவேந்திர படேல் குறித்து விசாரித்த போது, அவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. அதையடுத்து போலி மருத்துவராக இருந்து கொண்டு, இரண்டு லட்சம் ரூபாய் வசூலித்த சிவேந்திர படேல் மீது சின்ஹாட் போலீசில் அந்த பெண் புகார் கொடுத்தார். அவர்கள், குற்றம் சாட்டப்பட்ட சிவேந்தி படேல் மீது கொலை மற்றும் மோசடி பிரிவின் கீழ் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் ஏடிசிபி (கிழக்கு) காசிம் அப்ருதி கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட சிவேந்திர படேல், நோயால் பாதிக்கப்பட்டவரின் வீட்டை ஐ.சி.யு வார்டாக மாற்றும்படி கேட்டுள்ளார்.
பின்னர், அவர்களிடம் பணத்தை ெபற்று தனது வீட்டை ஐ.சி.யு வார்டாக மாற்றிக் கொண்டார். ஆக்சிஜன் வாயு நிரப்பப்பட்ட இரண்டு சிலிண்டர்களை வீட்டில் வைத்திருந்தார். இடைநிலைக் கல்வி சேவைகள் தேர்வு ஆணையம் மூலம் சிவேந்திரா ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டார். அதிக சம்பாதிக்கும் ஆசையில், தன்னை மருத்துவராக காட்டிக் கொண்டு மக்களுக்கு மருத்துவம் பார்த்துள்ளார். கொரோனா சிகிச்சை என்ற பெயரில் 20க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் பணம் பறித்துள்ளார். கொரோனா இல்லாதவர்களிடம் கூட, கொரோனா பாசிவிட் எனக்கூறி அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். பலர், கடன் வாங்கி இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.