மும்பையில் நடுக்கடலில் தவித்த 314 பேர் மீட்பு; 390 பேர் மாயம்
அகமதாபாத்: அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு குஜராத்தில் கரை கடந்தது. கடந்த 4 நாட்களாக குஜராத் நோக்கி புயல் நகர்ந்ததைத் தொடர்ந்து, கேரளா, தமிழகம், கோவா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை கொட்டியது. இப்புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் டையு மற்றும் உனா இடையே கரையை கடந்தது. அப்போது, 175 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் குஜராத்தின் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
16,500 வீடுகள் சேதமடைந்ததாகவும், 40,000 மரங்கள் மற்றும் 1,081 மின்கம்பங்கள் சரிந்ததாகவும், 159 சாலைகள் சேதமடைந்து 196 பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். புயலால் 7 பேர் பலியாகி உள்ளனர். அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2,437 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, டவ்தே புயல் தீவிர புயலாக வலுவிழந்து நகர்ந்து வருவதால், ராஜஸ்தானில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் இந்தியா கேட் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக அப்பகுதியில் தடுப்பு சுவர்கள் கடும் சேதமடைந்துள்ளன.
மும்பையில் நடுக்கடலில் இருக்கும் ஹீரா எண்ணெய்க் கிணற்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மிகப்பெரிய 3 படகில் ஓஎன்ஜிசி ஊழியர்கள் உட்பட 707 பேர் தங்கி இருந்தனர். அந்தப் படகு ஊழியர்களின் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. புயலால் நங்கூரமிடப்பட்டிருந்த அந்தப் படகு, நங்கூரத்தையும் மீறி காற்றில் நகர்ந்து, அருகில் இருந்த எண்ணெய்க் கிணற்றின் மீது மோதியது. இதில் படகு சேதமடைந்து அதற்குள் தண்ணீர் சென்றது. இதனால் படகு கவிழ ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து மூன்று போர்க் கப்பல்கள் சம்பவ இடத்தை அடைந்து படகில் இருந்தவர்களை மீட்க ஆரம்பித்தன. நேற்று மாலை வரை 2 கப்பலில் இருந்து 314 பேர் மீட்கப்பட்டு கடற்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இன்னும் 390 பேரை தேடும்பணி நடந்து வருகிறது.
பிரதமர் இன்று ஆய்வு
குஜராத்தில் புயலால் பாதிக்கப்பட்ட உனா, மஹூவா மற்றும் டையு பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்படும் அவர் பாவ்நகர் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வார்.