×

பிஎம் கேர்ஸ் நிதி மூலம் நடந்த ஊழல்: மத்திய அரசு தந்த தரமற்ற வென்டிலேட்டர்கள்: மக்களின் உயிரோடு விளையாடுவதாக பல்வேறு மாநில அரசுகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி,: பிஎம் கேர்ஸ் நிதியம் மூலம் வாங்கி அனுப்பி வைத்த வென்டிலேட்டர்களில் பெரும்பாலானவை ஓட்டை, உடைசலாக இருப்பதாக பல்வேறு மாநில அரசுகள் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளன. இதில் பெரும் ஊழல் நடத்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.


கொரோனா நிவாரண பணிகளுக்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியம் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த நிதியத்திற்கு பல முன்னணி தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், வெளிநாட்டு நிதிகள் குவிந்தன. ஆனால் அந்த நிதி எந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வாங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் தரமற்றவையாக இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிஎம் கேர்ஸ் நிதியம் மூலமாக மத்திய அரசு உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து சுமார் ரூ.2000 கோடிக்கு வென்டிலேட்டர்களை வாங்கியது. ஐசியு படுக்கையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க இந்த வென்டிலேட்டர்கள் மிகவும் அவசியமானவை. அந்த வகையில், பஞ்சாப்புக்கு 320, பீகாருக்கு 109, ராஜஸ்தானுக்கு 1900, உத்தரப்பிரதேசத்திற்கு 200, கர்நாடகாவுக்கு 2,025, தெலங்கானாவுக்கு 30, ஒடிசாவுக்கு 34 என அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு நிறைய வென்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவைகளில் பெரும்பாலானவை ஓட்டை உடைசலாக தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், மாநில அரசுகள் வென்டிலேட்டர்களை பெற்ற கையோடு அவற்றை பயன்படுத்தப்படாமல் குடோன்களில் கொட்டி வைத்துள்ளன.
ராஜஸ்தானுக்கு வழங்கப்பட்ட 1900 வென்டிலேட்டர்களில் 500 வென்டிலேட்டர் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. அவற்றிலும் பெரும்பாலானவை 1-2 மணி நேரம் மட்டுமே இயங்குவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் புகார் கூறி உள்ளார். சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து வந்த டெக்னீசியன்களுக்கு கூட அதை சரி செய்யத் தெரியாததால் டாக்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுபோன்ற தரமற்ற வென்டிலேட்டர்களை பொருத்தி எப்படி மக்கள் உயிருடன் விளையாட முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார் முதல்வர் கெலாட்.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் தனது டிவிட்டர் பதிவில், ‘‘அவுரங்காபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைத்து ஆய்வு செய்தது. அதில் மத்திய அரசு பிஎம் கேர்ஸ் நிதி மூலம் அனுப்பி வைத்த வென்டிலேட்டர்கள் பயனற்றதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த அறிக்கையில், வென்டிலேட்டர் வழங்கிய நிறுவன டெக்னீசியன்களால் கூட அவற்றை சரி செய்ய முடியாத அளவுக்கு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது’’ என்றார்.

கர்நாடகாவில் பெறப்பட்ட 2025 வென்டிலேட்டர்களில் 80% கோளாறு இருப்பவை. பீகாரில் அனுப்பப்பட்ட 109 வென்டிலேட்டர்களும் சரி செய்ய ஆள் இல்லாமல் அப்படியே குடோன்களில் ஓய்வெடுக்கிறதாம். மத்திய பிரதேசம், சட்டீஸ்கள், அசாம் போன்ற மாநிலங்களிலும் பிஎம் கேர்ஸ் வென்டிலேட்டர்கள் பயன்படுத்தாமல் தூக்கி போடப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களும் கூறும் பொதுவான குற்றச்சாட்டு என்னவெனில், வென்டிலேட்டர்களில் ஆக்சிஜன் அளவை தேவையான அளவுக்கு வைக்க முடிவதில்லை, ஒரு மணி நேரத்திற்கு பிறகு தானாகவே வென்டிலேட்டர்கள் செயல் இழந்து விடுகின்றன, அவற்றை டெக்னீசியன்களால் கூட சரி செய்ய முடிவதில்லை என்பதுதான்.

இந்த விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால்தான் பிரதமர் மோடி கூட மாநிலங்களில் பயன்படுத்தப்படாத வென்டிலேட்டர்களை தணிக்கை செய்ய உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ள நிலையில், தரமற்ற இதுபோன்ற வென்டிலேட்டர்கள் மூலம் மக்கள் உயிருடன் விளையாடுவது எந்த வகையில் நியாயம் என மருத்துவ நிபுணர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

வாடகைக்கு விடுங்க பாஜ எம்பி திமிர் பேச்சு

பாஜ எம்பி ராஜ்யவர்தன் சிங் ரதோர் கூறுகையில், ‘‘மாநில அரசுகளால் வென்டிலேட்டர்களை சரி செய்ய முடியாவிட்டால் அவற்றை தனியார் மருத்துவமனைகளுக்கு வாடகைக்கு கொடுத்து விடுங்கள். அவர்கள் சரி செய்து பயன்படுத்திக் கொள்வார்கள்’’ என்றார்.
சரி செய்யத் தெரியவில்லை வென்டிலேட்டர்கள் தரமற்றவையாக இருப்பதாக பல மாநில அரசுகள் புகார் கூறியும், மத்திய அரசு அவற்றை வழக்கம் போல் காது கொடுத்து கேட்கும் நிலையில் இல்லை. ‘‘இதெல்லாம் பொய் குற்றச்சாட்டு, மாநில அரசாங்கங்களில் சரியான டெக்னீசியன்கள் இல்லை. அதனால்தான் அவர்களால் வென்டிலேட்டர்களை சரியாக இயக்கத் தெரியவில்லை. பல மாநில மருத்துவமனைகளில் முறையான கட்டமைப்பு வசதி இல்லாததால் வென்டிலேட்டரை பயன்படுத்தாமல் வைத்துள்ளனர்’’ என மத்திய அரசு அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

Tags : BM Cares Finance , Corruption by BM Cars fund: Non-standard ventilators provided by the central government: Various state governments accused of playing with people's lives
× RELATED இதுவரை 428 தொகுதிகளில் தேர்தல் முடிந்த...