×

புதிய உறுப்பினர்கள் பதவியேற்பதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: நாளை சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது

சென்னை: சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக  கடந்த 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட 234 பேரும் எம்எல்ஏக்களாக இன்று (11ம் தேதி) பதவியேற்றுக் கொள்கிறார்கள். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக  பொறுப்பேற்றுள்ள கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இதைத்தொடர்ந்து 12ம் தேதி (நாளை) புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது.

இதுகுறித்து தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:16வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக தமிழக முதல்வர் பரிந்துரையின்படி  தமிழக கவர்னர் எனக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இன்று (11ம் தேதி) அனைத்து உறுப்பினர்களும் பதவி ஏற்கும் வரை எனது பணி தொடரும். புதிய சபாநாயகர் வருகிற வரை இரண்டு  நாட்கள் நான் தற்காலிக சபாநாயகராக செயல்படுவேன். இன்று (11ம் தேதி) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும். இதையடுத்து முதல்வர், அமைச்சர்கள், ஒவ்வொரு கட்சி தலைவர்கள் என  அனைத்து உறுப்பினர்களுக்கும் அகர வரிசைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும்.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெறும். இதில் யார் போட்டியிட மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதை தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும்.  நாளைக்கு யார் யார் சட்டப்பேரவைக்கு வருகிறார்களோ அவர்கள் பதவியேற்றுக் கொள்வார்கள். கொரோனா தொற்று இருப்பவர்கள் தனியாக வந்து, பிறகு சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொள்வார்கள்.  எத்தனை நாளில் பதவியேற்க வேண்டும் என்று எதுவும் இல்லை. அவர்கள் உடல்நிலை சரியானதும் வந்து பதவியேற்றுக் கொள்வார்கள். அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

இன்று நடைபெறும், பதினாறாவது சட்டமன்ற பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10  மணிக்கு, சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கம், மூன்றாவது  தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் நடைபெறுகிறது.  பதவியேற்க உள்ள எம்எல்ஏக்கள், சட்டமன்ற பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை (Certificate of Election))  உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ள வரும்பொழுது உறுப்பினர்கள் தவறாமல் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu Legislative Assembly ,Speaker , The Tamil Nadu Legislative Assembly convenes today to elect new members: The election of the Speaker will take place tomorrow
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...