×

பூரண குணமடைந்து வீடு திரும்பினாலும் கூட கொரோனா நோயாளிகளை துரத்தும் ‘மியூகோர்மைகோசிஸ்’: டெல்லி, குஜராத்தில் பலரது கண்கள் பறிபோனதால் அச்சம்

அகமதாபாத்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்த நோயாளிகளில் சிலருக்கு ‘மியூகோர்மைகோசிஸ்’ எனும் தொற்று பாதிப்பதால், அவர்களின் கண்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள், மருத்துவ சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். அவர்கள் தற்போது புதிய சிக்கலை எதிர்கொள்கின்றனர். அதாவது, ‘மியூகோர்மைகோசிஸ்’ அல்லது கறுப்பு பூஞ்சை தாக்குதலுக்கு ஆளாகும் நோயாளிகளில் பலரது கண்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், மீண்டும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள், கண் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கண்ணை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உயிரே போய்விடும் என்று கூறுகின்றனர். அதனால், கண் பாதிப்பு ஏற்பட்ட பல நோயாளிகள் கண் அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில், கடந்த 15 நாட்களில் 40க்கும் மேற்பட்ட குணமடைந்த கொரோனா நோயாளிகளுக்கு ‘கறுப்பு பூஞ்சை’ நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இவர்களில், 8 பேரின் கண்களை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். இதேபோன்ற பாதிப்பு டெல்லியின் கங்காராம் மருத்துவமனையில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, சூரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் காது மற்றும் தொண்டை நிபுணர் டாக்டர் பவின் படேல் கூறுகையில், ‘கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்ட பலர் ‘மியூகோர்மைகோசிஸ்’ நோயால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னர், சம்பந்தப்பட்ட நோயாளிக்கு கண் வலி, தலைவலி ஏற்படுகிறது. அதனை அவர் கவனிக்காமல் அலட்சியம் காட்டுவதால் ‘மியூகோர்மைகோசிஸ்’ தாக்குதலுக்கு ஆளாகின்றனர்’ என்றார்.

அதேபோல், மற்றொரு காது மற்றும் தொண்டை நிபுணர் டாக்டர் சங்கேத் ஷா கூறுகையில், ‘கண்ணை பாதிக்கும் கறுப்பு பூஞ்சை தொற்றானது, முதலில் மூக்கின் வழியாக மேல்நோக்கி சென்று கண்ணில் பாதிப்பை ஏற்படுகிறது. கிட்டதிட்ட 2 முதல் 4 நாட்களில் அது கண்ணில் அதன் பாதிப்பை உணர முடியும். அடுத்த 24 மணி நேரத்திற்குள், அது மூளையை தாக்குகிறது. இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உணரும்பட்சத்தில், உடனடி ‘மியூகோர்மைகோசிஸ்’ கண்ணை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ‘மியூகோமைகோசிஸ்’ தொற்றான, முதலில் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களைத்தான் தாக்குகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ள நோயாளிகள் மிகவும் பலவீனமாக இருப்பதால், அவர்களை எளிதாக குறிவைத்து தாக்குகிறது. மேலும், மருத்துவ சிகிச்சையின் போது கொடுக்கப்பட்ட மருந்துகளும் கூட, நோயாளிகளின் உடலை பலவீனப்படுத்தி விடுகின்றன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், எளிதில் இந்த ‘மியூகோர்மைகோசிஸ்’ தொற்று பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கான அறிகுறி என்னவென்றால், தாங்க முடியாத அளவிற்கு தலைவலி ஏற்படும், கண்கள் சிவப்பு நிறமாக மாறும். கண்ணில் நீர் வடியும். எனவே, ‘மியூகோர்மைகோசிஸ்’ தொற்று அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார்.

தற்போது இரண்டாவது அலையில் மட்டும் ‘மியூகோர்மைகோசிஸ்’ தொற்று தாக்கவில்லை. கடந்தண்டு கொரோனா முதல் அலை ஏற்பட்ட போதும், அகமதாபாத், வதோதராவில் 44 பேர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள், ரத்த புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ‘மியூகோர்மைகோசிஸ்’ பாதிப்பு இருந்தது. எனவே, கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பது அவசியமாகிறது. பூரண குணமடைந்து வீடு திரும்பினாலும் கூட, இந்த கொரோனா தொற்று விடாது வேறு ரூபத்தில் நோயாளிகளை தாக்கி வருகிறது. குறிப்பாக கண்கள் பறிபோவதால் டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags : Delhi ,Gujarat , ‘Mucormycosis’ that haunts corona patients even after complete recovery: Fear as many in Delhi, Gujarat lose their eyesight
× RELATED உங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைவரும்...