×

தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ‘ரசகுல்லா’ கொடுத்தது தப்பாயா?.. அண்டா பறிமுதல்; 2 பேர் கைது

ஹப்பூர்: உத்தரபிரதேசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மக்களுக்கு ரசகுல்லா கொடுத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்புள்ள 5 மாநிலங்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், தமிழகம் ஆகியன உள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. வெற்றி பெற்ற வேட்பாளர்கள், கொரோனா கட்டுபாடுகளை மீறி கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டது. ஆனால், ஹப்பூர் பகுதியில் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிப் பெற்ற வேட்பாளர் ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து இனிப்பு வகையை சேர்ந்த ‘ரசகுல்லா’ தயாரித்து அனைவருக்கும் வழங்கினார்.

இதையறிந்த ஹப்பூர் போலீசார், ரசகுல்லாவை மக்களுக்கு விநியோகம் செய்த இரண்டு பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 20 கிலோ ரசகுல்லாவை அண்டாவுடன் பறிமுதல் செய்தது. இதுெதாடர்பாக ஹப்பூர் காவல்துறை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி ரசகுல்லா இனிப்பை விநியோகித்த இருவரை கைது செய்துள்ளோம். அவர்கள் மீது சிஆர்பிசியின் பிரிவு 144-ஐ மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 20 கிலோ ரசகுல்லா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Rasakullah , Is it wrong to give 'Rasakullah' for winning the election? .. Egg confiscation; 2 people arrested
× RELATED ரசகுல்லா