கொரோனா தொற்று எதிரொலி: கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது: AICTE அறிவிப்பு !

டெல்லி: இயல்புநிலை திரும்பும் வரை கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. இரண்டாவது அலை பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறிவருகின்றன. நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், மருத்துவமனை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்றவற்றை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் ஒவ்வொரு மாநிலங்களாக முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.

அதனால், பலரும் வாழ்வாதரத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தநிலையில், தற்போதைய கொரானா காலகட்டத்தில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை 4 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேபோன்று கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை எந்த காரணம் கொண்டும் வேலையிலிருந்து நீக்க கூடாது என்றும் யாரேனும் நீக்கப்பட்டு இருந்தால் அந்த உத்தரவுகளை கல்லூரிகள் திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் பேராசிரியர்களுக்குரிய மாத ஊதியத்தை உரிய கட்டத்தில் செலுத்த வேண்டும் என்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆன்-லைன் வழியில் வகுப்புகள் நடைபெற்று வர கூடிய சூழ்நிலையில் பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை அவர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள வேறு கல்லூரிகளில் இணையதள வசதியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories: