×

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 1,212 நர்சுகள் பணி நிரந்தரம்: பதவி ஏற்புக்கு முன் மு.க.ஸ்டாலின் அதிரடி

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 1,212 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பதவி ஏற்பதற்கு முன் மு.க.ஸ்டாலின் அதிரடி  நடவடிக்கைகளை எடுத்துள்ளது சுகாதாரத்துறை ஊழியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்கள் காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் அதிகமாக  இருப்பதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை அதிகரித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் நேற்று திரும்ப பெறப்பட்ட நிலையில் 1,212 ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.  கொரோனா தீவிரம் குறித்து புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.

அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். அப்போது, சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். டாக்டர்கள், நர்சுகள், ஊழியர் பணியிடங்கள்  காலியாக இருப்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்காலிகமாக 1,212 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று  மு.க.ஸ்டாலின் ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

இது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவை இயக்குநர் குருநாதன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: சர்வதேச அளவில் கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்த பொது சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை எதிர்கொள்ள மருத்துவ மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு தேவைகள் அதிகரித்துள்ளது. அதன்  அடிப்படையில் சென்னையில் செவிலியர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

அதன்படி நேற்று நடந்த, மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் சென்னையில் உள்ள கொரோனா தடுப்பு மையங்களில் கூடுதல் மனித வளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒப்பந்த  அடிப்படையில் பணியாற்றி வரும் 1,212 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒப்பந்த பணியில் இருந்து வரும் 5ம் தேதிக்குள் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். அவர்களின் நிரந்தர பணிக்கான  உத்தரவு, இடம் ஆகியவை குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இவர்கள் மருத்துவ கல்வி இயக்குநர் முன்பு மே 10ம் தேதிக்குள் நேரில் வர வேண்டும். அவ்வாறு வராதவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்னரே கொரோனா கொடூரத்தை உணர்ந்து, ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகளை மு.க.ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்துள்ளது, அந்த துறையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சம்பளம்  3 மடங்கு உயரும்

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள  செவிலியர்கள் இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒப்பந்த  அடிப்படையில் இருந்த 1,212 செவிலியர்கள்  நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று  அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் அவர்களின் சம்பளம் மூன்று மடங்கு  உயருகிறது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும்போது செவிலியர்களின் சம்பளம்  ரூ.15 ஆயிரம் மட்டுமே. தற்போது பணி நிரந்தரம்  செய்யப்பட்டுள்ளதால் அவர்களின்  சம்பளம் ரூ.40 ஆயிரமாக உயருகிறது.



Tags : Stalin , Permanent employment of 1,212 contract nurses in government hospitals: MK Stalin's action before taking office
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...