×

வடமாநிலங்களை போன்று வேகம் எடுக்கும் கொரோனா; சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் குவியும் சடலங்கள்

* * பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
* அரசு விழித்து கொள்ளுமா?

சென்னை: வடமாநிலங்கள் போன்று தமிழகத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி இல்லாமலும் நோயாளிகள் சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது. பிணவறையில் குவியும் சடலங்களால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இனியாவது அரசு விழித்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர். கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை மிஞ்சி நிற்கிறது இந்தியா. தினசரி பாதிப்பு லட்சத்தை தாண்டி நிற்கிறது.

குறிப்பாக டெல்லி, அசாம், மகாராஷ்டிரா, ஜம்மு, பீகார், குஜராத், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டாலும், நோயாளிகளை அனுமதிக்க இடங்கள் இல்லாததாலும் வீதிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அவல நிலை தொடர்கிறது. அதே நேரத்தில் தொற்றால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. பல இடங்களில் இரவு-பகலாக இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுகிறது. இந்த காட்சிகளை எல்லாம் பார்க்கும்போது என்ன செய்வதென்றே தெரியாமல் உறவினர்கள் கண்ணீர்மல்க திகைக்கின்றனர்.

எந்த ஒரு இயற்கை பேரிடரையும் சுயமாக சமாளித்துமீண்டு வந்த இந்தியா, தற்போது, மருத்துவ உதவி கோரி அயல்நாடுகளில் கையேந்தும் நிலைக்கு கொரோனா தள்ளிவிட்டது. வடமாநிலங்களில் நடந்து வரும் துயர சம்பவத்தை போன்று தமிழகத்திலும் நடந்து விடுமோ என பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னை மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி மற்றும் வடசென்னையில் ராயபுரம், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், அத்திப்பட்டு வியாசர்பாடி அரக்கோணம், திருத்தணி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும் கொரோனாவின் பரவல் வேகமெடுத்துள்ளது.

இந்த பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க முடியவில்லை. போதுமான படுக்கை வசதி இல்லாததால் நேற்று மட்டும் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் செயற்கை சுவாச சிலிண்டர்களுடன் பல மணிநேரம் காத்திருந்தனர். இதுபோல் கொரோனா வார்டில் இறந்தவர்களின் சடலங்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக படுக்கையில் வைக்கப்பட்டிருந்தது.

இதனால் பக்கத்து படுக்கையறையில் இருந்த நோயாளிகள், பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இந்நிலையில் நேற்று கொரோனா நோயாளிகளின் உடல்களும், மற்ற சிகிச்சைகளில் இறந்தவர்களின் உடல்களும் பிணவறையில் ஒன்றோடு ஒன்றாக இருந்ததால் பிணவறை ஊழியர்களுடன் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொரோனா நோயாளி உடலில் உள்ள கிருமிகள், இயற்கையாக இறந்தவர்களின் உடல்களில் பரவ வாய்ப்புள்ளது என குற்றம்சாட்டினர். மேலும் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் பிணவறை முழுவதும் நிரம்பி இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

மருத்துவமனை கண்காணிப்பாளர், பிணவறை, வார்டு பொறுப்பாளர், மருத்துவர் ஆகியோர் கையொப்பமிட்டு சடலம் கைக்கு கிடைக்க பல மணி நேரத்துக்கும் மேலாவதால் உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கொரோனா நோயால் இறந்தவர்களின் உடலை சுகாதார உதவி ஆய்வாளர் பெற்று சுடுகாட்டில் இறுதி மரியாதை செய்ய வேண்டும். இதில் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதால் இறந்தவர்களின் உறவினர்கள் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், பிணவறை முழுவதும் சடலங்கள் நிரம்பி வழிகிறது. இதுபோல் சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற அதிகளவில் வருகிறார்கள்.

தினந்தோறும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்படுகிறது. இதை சுகாதார துறையும், அரசும் விழித்து கொண்டு, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Northerners ,Government Stanley Hospital ,Chennai , Corona, que gana velocidad como los norteños; Acumulación de cadáveres en el Government Stanley Hospital, Chennai
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...