×

கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதியை பெற ட்விட்டர் கணக்கு அறிமுகம்!: தமிழக அரசு தகவல்..!!

சென்னை: கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கை வசதியை பெற ட்விட்டர் கணக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. @104GoTN என்ற ட்விட்டர் கணக்கு மூலம் படுக்கை வசதியை கோரலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கோவிட் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தினசரி தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் கொரோனா நோயாளிகள் பலர் தங்களுக்கு வெண்டிலேட்டர் துணையுள்ள படுக்கை வசதிகள் வேண்டும். 


அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிவதால் எந்த மருத்துவமனையில் படுக்கை வசதிகள் உள்ளது என்பதை கண்டறிய சிரமமாக உள்ளது என்று சமூக வலைத்தளங்கள் மூலமாக பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதியை பெற ட்விட்டர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக சுகாதாரத்துறை சார்பில் ஒருங்கிணைந்த கட்டளை மையமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் படுக்கை வசதிகளுடன் ஆக்சிஜன் கிடைப்பதையும் இந்த ஒருங்கிணைந்த கட்டளை மையம் உறுதி செய்யும். 


ட்விட்டர் வசதியை பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் கிடைப்பது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உருளைகள் என்னென்ன தேவைப்படுகிறது ஆகியவற்றை ஒருங்கிணைக்கக்கூடிய சிறப்பு மையமாக இந்த ஒருங்கிணைந்த மையம் என்பது செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Tags : Twitter ,Corona ,TN , Corona patient, bed, Twitter account
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு