×

கொரோனா தொற்றால் பாதிப்படைந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி காலமானார்

புதுடெல்லி : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய சோலி சொராப்ஜி கொரோனா நோய் தொற்று பாதிப்பின் காரணத்தினால் சிகிச்சை பலனின்றி அதிகாலை காலமானார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை என்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் மூச்சு திணறலுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி ஆகியவையும் போதிய அளவு இல்லாமல் பற்றாக்குறையாக உள்ளது. குறிப்பாக டெல்லியை பொருத்தமட்டில் கொரோனா வைரஸ் தொற்று தனது கோரத்தாண்டவத்தை தொடர்ந்து காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் மற்றும் மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலாக இருந்த சோலி சொராப்ஜி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

 இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91 ஆகும். மேலும் இந்தியாவின் உயரிய பத்ம விபூஷண் விருது பெற்ற பெருமைக்கு உரியவர் சோலி சொராப்ஜி. கடந்த 1930ம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சியை பெற்றார். இதையடுத்து கடந்த 1971ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்ட இவர் 1989ம் ஆண்டும், அதேப்போன்று 1998ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார்.

 இவர் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய காலக்கட்டத்தில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது தொடர்பான பல வழக்குகளில் ஆஜராகி வாதாடியவர். இதைத்தவிர முக்கியமாக மனித உரிமை வழக்கறிஞரான சொராப்ஜி கடந்த 1997ல் நைஜீரியாவிற்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதையடுத்து சோலி சொராப்ஜியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர் தங்களது இறங்களை தெரிவித்தனர். இதில் கடந்த 10 நாட்களில் மட்டும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களாக பணியாற்றி வந்த 8க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் உயிரிழந்தனர் என்பது கூடுதல் தகவலாகும்.

Tags : Former ,Supreme Court ,Attorney General ,Chloe Sorabjee , கொரோனா
× RELATED திறமையானவர்களுக்கு பதவி...