×

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: முன்னணி நிலவரம் 9 மணி முதல் தெரியவரும்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை மறுதினம் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. முன்னணி நிலவரங்கள் காலை 9 மணி முதல் தெரியவரும். அன்று பிற்பகல், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார என்ற முழு விவரங்கள் தெரிந்துவிடும். தமிழகத்தில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவி காலம் மே 24ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, மார்ச் 19ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து பிரசாரம் என தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது. தமிழகத்தில் பெரிய கட்சிகளான திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி மற்றும் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக உள்ளிட்ட 5 கட்சிகள் தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதியிலும் இறுதியாக 3,998 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கமலஹாசன், சீமான், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அறிவித்தபடி கடந்த ஏப்ரல் 6ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக இருந்தாலும், 4 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 311 பேர் மட்டுமே வாக்களித்தனர். அதாவது தமிழகத்தில் 72.81 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர். இதில் அதிகப்பட்சமாக கரூர் தொகுதியில் 83.96 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக சென்னையில் 59.15 சதவீதம் பேரும் வாக்களித்தனர். தமிழகம் முழுவதும் 88,937 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்ததும், 88,937 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள ஸ்டிராங் ரூமில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மற்றும் கட்சி முகவர்கள் கண்காணிப்பு என அனைத்து பாதுகாப்பு வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மே 2ம் தேதி (நாளை மறுதினம்) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தமிழகம் முழுவதும் மொத்தம் 75 மையங்களில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மையங்களிலும் குறைந்தபட்சம் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.

வாக்கு எண்ணுவதற்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையில் வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவ வீரர்களும், 2வது மற்றும் 3 அடுக்கில் மாநில போலீசாரும், 4வது அடுக்கில் (நுழைவு வாயிலில்) உள்ளூர் போலீசாரும் ஈடுபட்டு இருப்பார்கள். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், அரசியல் முகவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் 2 கட்ட தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற யாரும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உடல்வெப்ப நிலை பரிசோதனையில் 98.5 டிகிரிக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே உள்ள அனுமதிக்கப்படுவார்கள். மாஸ்க் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். மே 2ம் தேதி (நாளை மறுதினம்) சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் தலா 500 தபால் வாக்குகளை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கும். அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும் எந்த வேட்பாளர் முன்னணியில் உள்ளார் என்ற விவரம் 2ம் தேதி காலை 9 மணி முதல் தெரியவரும்.

சிறிய தொகுதிகளில் அன்று மாலைக்குள் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும். சோழிங்கநல்லூர் போன்று அதிக வாக்காளர்கள் உள்ள பெரிய தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இரவு முதல் நள்ளிரவு வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு சுற்று முடிவுகளை வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள பெரிய திரையில் வெளியிடப்படும். அதேபோன்று தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி இரவு வரை நீடித்தாலும், தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது நாளை மறுதினம் மதியத்திற்குள் தெரிந்துவிடும். அனைத்து தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி இரவு வரை நீடித்தாலும் நாளை மறுதினம் மதியத்திற்குள் தெரிந்துவிடும்.

Tags : TN Legislative Elections , Tamil Nadu Assembly elections will be held on May 2 at 8 am
× RELATED தமிழக சட்டமன்ற தேர்தல்: எடப்பாடி...